Nov 23, 2026 - 04:18 PM

இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு தாம் உணர்ந்ததை விட தற்போது அதிக மதிப்பளிக்கப்படுவதாக உணர்கின்றனர். Mark and Comm நிறுவனத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கையில் இதழியல் துறையின் நிலை 2026 எனும் ஆய்வறிக்கையின் பிரகாரம் இத்தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 55% ஆகக் காணப்பட்ட நிலையில், நாட்டில் இதழியல் என்பது மதிப்பிற்குரிய ஒரு தொழிலாகும் என இம்முறை பதிலளித்தவர்களில் 77% ஆனோர் தெரிவித்துள்ளனர். அத்துடன், எதிர்காலம் குறித்து அவநம்பிக்கை கொண்டுள்ள ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. பாரம்பரிய இதழியல் துறை அழிந்து வருகின்றது என நம்புவோரின் விகிதம் 43% இலிருந்து 25% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
பணிபுரியும் ஊடகவியலாளர்களை அடிப்படையாகக் கொண்டு இந்நிறுவனம் வருடாந்தம் மேற்கொள்ளும் ஆய்வின் இரண்டாவது பதிப்பாக இவ்வறிக்கை அமைந்துள்ளது. அச்சு, ஒலிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பணியாற்றும் 44 செய்தியாளர்கள், ஆசிரியர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்களிடமிருந்து பெறப்பட்ட பதில்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 2026 செப்டம்பர் மாதத்தில் இம்மூன்று மொழிகளிலும் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது.
நவம்பர் 18 ஆம் திகதி Mark and Comm அணியினர், ஊடகத் துறை பிரதி அமைச்சர் கலாநிதி. கௌசல்யா ஆரியரட்னவை சந்தித்து, இந்த அறிக்கையை கையளித்திருந்ததுடன், அதன் உள்ளம்சங்களை கலந்துரையாடியிருந்தனர். கலாநிதி. ஆரியரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “இதுபோன்ற ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவது கொள்கை வடிவமைப்பாளர்களாகிய எமக்கு மிகவும் முக்கியமானதாகும், அது எமக்கு வழிகாட்டும் ஆவணமாக அமைந்திருந்தது. ஊடகவியலாளர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டறிவது, அவர்கள் எதிர்கொள்ளும் யதார்த்த நிலைமைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான ஆதரவு குறித்த தெளிவான சித்திரத்தை எமக்கு வழங்குவதுடன், ஊடகத் துறைக்காக மேலும் சிறப்பான, தகவலறிந்த தீர்மானங்களை எடுப்பதற்கும் எமக்கு உதவுகின்றது.” என்றார்.
பெரும்பாலான ஊடகவியலாளர்கள் தமது தொழில் குறித்து நேர்மறையான மனநிலையைக் கொண்டுள்ளனர். 56% ஆனோர் தமது தொழிலில் பாதுகாப்பாக உணர்வதுடன், 18% ஆனோர் தமது பணிகளில் திருப்தியடையாத நிலையில், 48% ஆனோர் தமது பணிகளில் திருப்தி அடைந்துள்ளனர். மூன்று பேரில் இருவர் இன்னமும் இளைஞர்களுக்கு இதழியலை ஒரு தொழிலாகப் பரிந்துரைத்த போதிலும், அதன் யதார்த்தங்களை நன்கு புரிந்துகொண்டு, இத்துறையில் நுழையுமாறு பெரும்பாலானோர் அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தனர்.
ஐந்து ஊடகவியலாளர்களில் நால்வர் ஏற்கனவே தமது பணிகளில் AI ஐப் பயன்படுத்துகின்றனர். மூவரில் ஒருவர் ஆய்வு செய்தல், பதிப்பை உருவாக்கல் அல்லது திருத்துதல் ஆகியவற்றிற்காக அதனைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதுடன், 45% ஆனோர் குறிப்பிட்ட பணிகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். AI கருவிகளுடன் பணியாற்றத் தாம் நன்கு தயாராக இருப்பதாக 43% ஆனோர் குறிப்பிட்டதுடன், தமக்கு மேலும் பயிற்சிகள் தேவை என மேலும் 43% ஆனோர் தெரிவித்தனர். தாம் தயாராக இல்லை என 7% ஆனோர் மட்டுமே தெரிவித்தனர். சுமார் அரைப்பங்கினர் தமது தொழில் வாழ்க்கைக்கு மிகவும் உதவக்கூடிய பயிற்சியாக டிஜிட்டல் மற்றும் மல்டிமீடியா இதழியலைக் குறிப்பிட்டுள்ளதுடன், தாம் முறையான பயிற்சியைப் பெற விரும்புவதாகவும், ஆனால் அதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை எனவும் 36% ஆனோர் தெரிவித்துள்ளனர்.
சுயாதீன சுயஒழுங்குமுறை அமைப்பொன்றின் ஊடாக நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தன்மைத் தரநிலைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என 70% ஆனோர் விரும்புவதுடன், சுயஒழுங்குமுறை செயற்படுகின்ற போதிலும் அது மேலும் மேம்படுத்தப்பட முடியும் என 58% ஆனோர் குறிப்பிட்டனர். பலவீனமான உண்மைச் சரிபார்ப்பு மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுதல் ஆகியவையே அதிகளவில் சுட்டிக்காட்டப்பட்ட ஒழுக்கநெறி சார்ந்த கவலையாக அமைந்திருந்தது. இதனை 61% ஆனோர் குறிப்பிட்டுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து பரபரப்பூட்டும் செய்திகளும் பக்கச்சார்பான செய்தி அறிக்கையிடலும் 57% ஆகப் பதிவாகியுள்ளன. இத்துறை மதிப்பிற்குரியது என ஊடகவியலாளர்கள் நம்புகின்ற போதிலும், பொதுமக்கள் தம்மை முழுமையாக நம்பக்கூடியவர்களாகவும் பெறுமதிமிக்கவர்களாகவும் பார்க்கிறார்கள் என நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே கருதுகின்றனர். இது அந்நம்பிக்கையை வென்றெடுப்பதற்கான மிகத் தெளிவான பாதையாகச் செய்தி உறுதிப்படுத்தலையே சுட்டிக்காட்டுகின்றது.
ஊடக நிறுவனங்களின் நிதி ஆரோக்கியம் பரவலாகக் காணப்படும் மிக முக்கிய சவாலாக அமைந்துள்ளதுடன், பதிலளித்தவர்களில் 73% ஆனோர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். நால்வரில் மூவர் தமது பணிகளுக்கான கொடுப்பனவுகள் தாமதமாவதை எதிர்கொண்டுள்ளதுடன், நியாயமானதும் உரிய நேரத்திலானதுமான கொடுப்பனவு மிக முக்கியமான மாற்றமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டவர்களின் விகிதம் கடந்த ஆண்டின் 24% இலிருந்து இவ்வாண்டு 48% ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட அரைவாசிப் பேர் தமது செய்தி அறிக்கையிடலுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் அல்லது சட்ட அழுத்தங்களை ஏதோவொரு சந்தர்ப்பத்தில் எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அத்துடன், பெண் ஊடகவியலாளர்கள் மேலதிக பாதுகாப்பு அல்லது பணியிட அபாயங்களை எதிர்கொள்கின்றனர் என 73% ஆனோர் நம்புகின்றனர். தமது பணியிடத்தில் ஏதோவொரு வகையான உளநல ஆதரவு வழங்கப்படுவதாக 63% ஆனோர் குறிப்பிட்டதுடன், அது பயனுள்ளதாக இருப்பதாக 21% ஆனோர் தெரிவித்துள்ளனர். இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றது.
Mark and Comm இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தன்சில் தாஜுதீன் கருத்துத் தெரிவிக்கையில், “இரண்டு வருடங்களாக ஊடகவியலாளர்களின் கருத்துக்களுக்குச் செவிமடுத்தமை, எமக்கு ஊக்கமளிக்கும் ஒரு விடயத்தை உணர்த்துகின்றது. இத்துறையில் உள்ளவர்கள் தமது தொழிலின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர். அத்துடன், எதிர்காலத்தில் வரவிருக்கும் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக உள்ளனர். தமக்கு மிக அவசியமானவை எவை என்பதிலும் அவர்கள் தெளிவாக உள்ளனர். நியாயமானதும் உரிய நேரத்திலானதுமான கொடுப்பனவு, பணியிடப் பாதுகாப்பு மற்றும் புதிய கருவிகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான திறன்கள் ஆகியன அவையாகும். வலுவானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான ஊடகத் துறை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் நன்மையளிக்கின்றது. இவ்வறிக்கையானது ஊடக நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான ஒரு பொதுவான தோற்றப்பாட்டை வழங்குகின்றது. இதன் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து இத்துறையை மேலும் கட்டியெழுப்ப நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
ஊடக நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் இத்துறையைச் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய ஆறு பிரதான துறைகளை இவ்வறிக்கை அடையாளம் கண்டுள்ளது. நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கான நியாயமானதும் உரிய நேரத்திலும் கிடைக்கும் கொடுப்பனவு நடைமுறைகள் மற்றும் இத்துறையில் உள்ள பெண்கள் உட்பட அனைத்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கான வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன இவற்றுள் அடங்குகின்றன. மேலும், பணிபுரியும் ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்படும் தொழில்முறை நியமங்கள், டிஜிட்டல், மல்டிமீடியா மற்றும் AI திறன்களில் நடைமுறைப் பயிற்சிகள், உண்மைச் சரிபார்ப்பு மற்றும் செய்தி உறுதிப்படுத்தலில் அதிக முதலீடு செய்தல், மற்றும் பணியிடத்தில் பயனுள்ள நல்வாழ்வு மற்றும் உளநல ஆதரவு ஆகியவையும் இதில் உள்ளடங்குகின்றன.
































