Nov 23, 2026 - 04:23 PM

தனது 'Digital by Default' மூலோபாயத்தின் மூலம், உலகளாவிய அட்டை மற்றும் கொடுப்பனவுத் துறைசார் செய்திகள், புள்ளிவிவரங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான உலகின் மிக மதிப்புமிக்க சுயாதீன மூலமான 'The Nilson Report' இனால் தரப்படுத்தப்பட்ட ஒரேயொரு இலங்கை நிறுவனம் என்ற பெருமையை கொமர்ஷல் வங்கி தனதாக்கியுள்ளது.
நெல்சன் அறிக்கையின் சமீபத்திய பதிப்பில், 2025 ஆம் ஆண்டின் வரவு அட்டை செலவினப் பெறுமதிகளின் அடிப்படையில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மிகப்பெரிய வரவு அட்டை வழங்குநர்களில் முதல் 50 இடங்களுக்குள் (Top 50) கொமர்ஷல் வங்கி இடம்பிடித்துள்ளது. திரட்டப்பட்ட வரவு அட்டை செலவினங்களில் இலங்கையின் சந்தை முன்னோடியாகவும், நாட்டின் மிக உயர்ந்த அட்டைப் பயன்பாட்டைக் கொண்டதாகவும் விளங்கும் கொமர்ஷல் வங்கியின் நீண்டகால நிலைக்கு இந்த மைல்கல் மேலும் வலுச்சேர்க்கிறது.
இவ்வங்கீகாரத்தின் முக்கியத்துவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க: 'உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் முன்னணி வங்கி நிறுவனங்களால் வழிநடத்தப்படும் ஒரு பிராந்தியத்தில், தனது டிஜிட்டல் கொடுப்பனவு ஆற்றல்களின் பலத்தைக் கொண்டு இலங்கையினாலும் போட்டியிட முடியும் என்பதை இது வெளிப்படுத்துவதால், இந்த சாதனை மிகவும் விசேட அர்த்தத்தைக் கொண்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்கள் கொமர்ஷல் வங்கி மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், டிஜிட்டல் கொடுப்பனவுகளை முன்னெடுப்பதில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கும், நவீன கொடுப்பனவு அனுபவங்களை எளிதில் அணுகக்கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும், நன்மையளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கான எமது அர்ப்பணிப்புக்கும் இதுவொரு சான்றாகும். அதைவிட முக்கியமாக, நமது நாட்டின் டிஜிட்டல் கொடுப்பனவுச் சூழலமைப்பானது நமது எல்லைகளுக்கு அப்பாலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதன் மூலம், இது இலங்கையின் கொடுப்பனவுத் துறைக்கான ஒரு வரலாற்று மைல்கல்லாகவும் அமைகின்றது' என்று குறிப்பிட்டார்.
'The Nilson Report' இன் ஒக்டோபர் 2026 பதிப்பில் (வெளியீட்டு இலக்கம்: 1317) பிரசுரிக்கப்பட்டுள்ள இந்தத் தரவரிசையானது, கொமர்ஷல் வங்கியின் 1.19 பில்லியன் அமெரிக்க டொலர் (தற்போதைய மாற்று விகிதங்களின்படி அண்ணளவாக ரூ.396 பில்லியன்) வருடாந்த வரவு அட்டை கொள்வனவுப் பெறுமதியை அங்கீகரிக்கிறது.
இப்பெறுமதியானது 3.799 மில்லியன் வரவு அட்டைகளைக் கொண்ட கட்டமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டதுடன், இதில் ஓர் அட்டைக்கான சராசரி வருடாந்த கொள்வனவுப் பெறுமதி 314 அமெரிக்க டொலர்களாக (104,562 ரூபா) பதிவாகியுள்ளது. இத்தரவரிசையானது வழங்கப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கை அல்லது ATM பண மீளப்பெறுகைகளின் அடிப்படையிலன்றி, வரவு அட்டைகள் மூலமாக முன்னெடுக்கப்பட்ட உண்மையான கொள்வனவுப் பெறுமதிகள் மற்றும் பரிவர்த்தனை நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, POS முனையங்கள், எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் மற்றும் e-commerce தளங்கள் ஊடாகப் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்வதற்கு கொமர்ஷல் வங்கியின் வரவு அட்டைகள் எந்த அளவிற்குத் தீவிரமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை இது துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. தனது 'Digital by Default' மாதிரி ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட நடத்தை இதுவே என்றும் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான 'Top 1000 World Banks' தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைந்துள்ள 274 கிளைகள் மற்றும் தன்னியக்க இயந்திரங்களின் விரிவான வலையமைப்புடன் செயற்பட்டுவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
































