Nov 23, 2026 - 07:31 PM

இலங்கையில் நெருங்கிய துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் சுமார் அரைவாசிப் பேர் (49.3%) எவ்வித முறையான உதவியையும் நாடவில்லை என்பது தேசிய மகளிர் நலன்புரி ஆய்வின் (National Women's Wellbeing Survey) தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு அறிக்கையின்படி, துணையைக் கொண்டிருந்த பெண்களில் ஐந்து பேரில் இருவர் (39.8%) தமது வாழ்நாளில் உடல், பாலியல், உளவியல் அல்லது பொருளாதார ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன், ஐந்து பேரில் ஒருவர் (20.4%) நெருங்கிய துணையினால் உடல் மற்றும்/அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்.
சமூக அவப்பெயர், பழிவாங்கல்கள் குறித்த அச்சம் மற்றும் தற்போதுள்ள உதவிச் சேவைகள் தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு ஆகியனவே அவர்கள் எவ்வித உதவியையும் நாடாமைக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
இந்த நிலைமைக்குத் தீர்வு காணும் முகமாக, பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு (GBV) உள்ளானவர்களுக்கு நீதிக்கான அணுகலை வலுப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தை இலங்கை உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA இலங்கை) மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் (FAGBV) ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளன.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.டி. விக்ரமசிங்க மற்றும் UNFPA இலங்கையின் உதவிப் பிரதிநிதி வைத்தியர் தயாநாத் ரணதுங்க ஆகியோர் இது தொடர்பில் தெளிவுபடுத்தினர்.
நவம்பர் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் முதல் டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் மனித உரிமைகள் தினம் வரை முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்றிட்டம், "#நீதிஎனதுஉரிமை (#JusticeIsMyRight) ஒன்றிணைந்து பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை நிறுத்துவோம்" எனும் தேசிய தொனிப்பொருளின் கீழ் வழிநடத்தப்படுகின்றது.
2026 நவம்பர் 25 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் (Race Course) இருந்து கொழும்பு மாநகர சபை வரை தேசிய நடைபேரணி ஒன்று நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து நீதியை நிலைநாட்டுவதற்கு உள்ள தடைகளை வெற்றிகொள்வது தொடர்பான கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.
வன்முறைக்கு உள்ளானவர்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்காக 'சேவை வழங்குநர்களின் தேசிய டிஜிட்டல் விபரத்திரட்டு (National Digital Directory of GBV Service Providers) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பொது இடங்களில் இடம்பெறும் பாலியல் தொல்லைகள் மற்றும் குடும்ப வன்முறைகளை அடையாளம் கண்டு, அதில் தலையிடுவதற்குச் சமூகத்தை ஊக்குவிக்கும் தொடர்பாடல் வேலைத்திட்டமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.
சட்ட மற்றும் கொள்கை ரீதியான சீர்திருத்தப் பரிந்துரைகள் ஒன்றிணைக்கப்பட்டு டிசம்பர் 12–13 ஆம் திகதிகளில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு உதவுவதற்காக 24 மணிநேரமும் செயற்படும் 1938 கட்டணமில்லா மகளிர் உதவிச் சேவை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் கௌரவம் மற்றும் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் நெறிமுறை ரீதியான செய்தி அறிக்கையிடலில் ஈடுபடுமாறு ஊடக நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

































