Nov 23, 2026 - 09:13 PM

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இரண்டு முறைகளின் கீழ் பாதணிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய நான்கு மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு, தமக்குக் கிடைக்கும் வவுச்சர்கள் மூலம் திறந்த சந்தையில் பாதணிகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேல், தென், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய ஐந்து மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, உள்நாட்டுப் பாதணி விநியோகஸ்தர்கள் பாடசாலைக்கே வருகை தந்து பாதணிகளை வழங்கவுள்ளனர்.
இந்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய விநியோகஸ்தர்களைப் பதிவு செய்தல் மற்றும் வவுச்சர்களை ஸ்கேன் (Scanning) செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் காலப்பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய 2026 நவம்பர் 03 ஆம் திகதி முதல் 2026 டிசம்பர் 20 ஆம் திகதி வரை விநியோகஸ்தர்களைப் பதிவு செய்தலும், 2026 நவம்பர் 10 ஆம் திகதி முதல் 2026 டிசம்பர் 20 ஆம் திகதி வரை வவுச்சர்களைப் பரிசோதித்தலும் (Scanning) இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

































