Nov 25, 2026 - 05:25 PM

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டுப் பிரச்சாரம்
இன்று (நவம்பர் 25) ஆரம்பமாகும் இவ்வேளையில், எளிமையான அதேவேளை மனதை
உலுக்கும் ஒரு கேள்வி எழுகின்றது: பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உள்ளான
பின்னர், நீதியை நாடி முன்வருவதற்கான துணிச்சலான தீர்மானத்தை எடுக்கும் ஒரு பெண்
அல்லது சிறுமி உண்மையில் எதனை எதிர்கொள்ள வேண்டியுள்ளது? அவளைப் பாதுகாக்க
வேண்டிய இடங்களே அவளைப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளும்போது, பாதுகாப்பு மற்றும்
சுதந்திரம் என்பவற்றின் உண்மையான அர்த்தம் என்ன?
பல பெண்களுக்கு இந்தத் துயரமான அனுபவம் அவர்களது சொந்த வீட்டிலேயே
ஆரம்பமாகின்றது. மிகவும் பாதுகாப்பாக உணர வேண்டிய இடமே அச்சமும் வன்முறையும்
நிறைந்த இடமாக மாறிவிடுகின்றது. அதுமட்டுமன்றி, தனக்குச் சொந்தமானவர்கள் என்றும்
பாதுகாப்பிற்காக நம்பியவர்கள் என்றும் கருதிய குடும்பமும் சமூகமும், அவள் நீதியை நாடிச்
செல்வதைத் தடுத்து, அவளுக்கு எதிராகவே செயற்படுகின்றன. வீட்டிற்குள் வன்முறை
இடம்பெறும்போது, அமைதியாக இருக்குமாறும் பிரச்சினைகளைத் தனிப்பட்ட முறையில்
தீர்த்துக்கொள்ளுமாறும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் கடுமையான
அழுத்தங்களை அவள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தனது பிள்ளைகளின் எதிர்காலம்,
தொழில் மற்றும் குடும்பத்தின் கௌரவம் தொடர்பான ஆழமான கவலையும் அச்சமும் அவளை
மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலைக்குத் தள்ளுகின்றன.
இருப்பினும், இத்தனை தடைகளையும் கடந்து, வீட்டை விட்டு வெளியேறி, தனக்கு நேர்ந்த
வன்முறை குறித்து முறைப்பாடு செய்வதற்கான துணிச்சலை அவள் திரட்டிக்கொள்ளும்போது,
அவளுக்கு முன்னால் புதிய சவால்கள் உருவாகின்றன. வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம்,
வைத்தியசாலை மற்றும் நீதிமன்றம் வரையான பயணத்தில், சேவை வழங்கும்
நிறுவனங்களுடன் தொடர்புடைய பல்வேறு தடைகளை அவள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
முறைப்பாடுகளைப் பொருட்படுத்தாத மனப்பான்மை, சமரசம் செய்துகொள்ளுமாறு
விடுக்கப்படும் அழுத்தங்கள், மொழித் தடைகள், தனியுரிமை மற்றும் பெண்
உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, உணர்வுபூர்வமான அணுகுமுறையற்ற மற்றும்
மனவேதனையை ஏற்படுத்தும் விசாரணைகள், அத்துடன் சட்டம் மற்றும் தமது உரிமைகள்
தொடர்பில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களிடையே காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட
அறிவு ஆகியவை இத்தடைகளில் அடங்குகின்றன.
நீண்டகாலமாக இழுபறியாக நீடிக்கும் சட்ட நடைமுறைகளால் ஏற்படும் கடுமையான
பொருளாதார மற்றும் உளவியல் அழுத்தங்களும், தாம் எதிர்கொண்ட துயரமான அனுபவத்தை
மீண்டும் மீண்டும் விவரிப்பதன் மூலம் அதே வேதனையைத் திரும்பத் திரும்ப அனுபவிக்க
வேண்டிய நிலையும் இந்தச் சூழ்நிலையை மேலும் மோசமாக்குகின்றன. இதன் விளைவாக,
நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான முழுச் சுமையும் வன்முறைக்கு உள்ளான பெண்ணின்
தோள்களிலேயே சுமத்தப்படுகின்றது.
இந்தச் சவால்களின் உண்மையான தீவிரத்தன்மையை இலங்கையின் 2019ஆம் ஆண்டு
தேசிய பெண்கள் நலவாழ்வு ஆய்வு தெளிவாக வெளிப்படுத்துகின்றது. திருமணமான அல்லது
துணையுடன் உறவில் இருந்த பெண்களில் ஐந்தில் ஒருவர் (20.4%) தமது வாழ்நாளில்
நெருங்கிய துணையினால் உடல்ரீதியான மற்றும்/அல்லது பாலியல் வன்முறைக்கு (இவ்விரு
வகையான வன்முறைகளுக்கு மாத்திரம்) உள்ளாகியுள்ளனர். அதேவேளை, ஐந்தில் இருவர்
(39.8%) உடல்ரீதியான, பாலியல், உளவியல் அல்லது பொருளாதார வன்முறை அல்லது
கட்டுப்படுத்தும் நடத்தைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பால்நிலை அடிப்படையிலான
வன்முறைகளுக்கும் உள்ளாகியுள்ளனர். இதைவிட மிகவும் மனதை உலுக்கும் விடயம்
என்னவெனில், தமது துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் ஏறத்தாழ
அரைவாசிப் பேர் (49.3%) ஒருபோதும் முறையான உதவியை நாடி முன்வரவில்லை
என்பதாகும்.
இந்தப் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால், தம்மீது குற்றம் சுமத்தப்படுமோ, தாம்
விமர்சிக்கப்படுவோமோ அல்லது தமது அனுபவம் நம்பப்படாமல் போய்விடுமோ என்று
அஞ்சிய ஒரு தாய், மகள் அல்லது சகோதரி இருக்கின்றார். அவர்கள் தமது பிள்ளைகளின்
எதிர்காலம், பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூகத்திலிருந்து எதிர்கொள்ள வேண்டிய
எதிர்ப்புகள் குறித்து கவலைப்படும் பெண்களாவர். தலைமுறை தலைமுறையாக வன்முறை
சாதாரணமான ஒன்றாகக் கருதப்பட்டு வந்ததன் காரணமாக, அதனை மௌனமாகச்
சகித்துக்கொண்ட பெண்களும் இவர்களில் அடங்குவர்.
இந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து, வன்முறைக்கு உள்ளான ஒவ்வொரு பெண்ணும் நீதியை
நாடிச் செல்லும் பயணத்தைத் தடைகளற்றதும் அவர்களை வலுப்படுத்துவதுமான பாதையாக
மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
தொடர்ந்தும் நிலவும் சவால்களுக்கு மத்தியிலும், பெண்களின் உரிமைகளை
முன்னேற்றுவதற்கும் அவர்களை வலுவூட்டுவதற்கும் இலங்கை பல முக்கியமான
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை
வலுவூட்டுதல் தொடர்பான தேசிய கொள்கை (2023–2033) மற்றும் 2024ஆம் ஆண்டின் 37ஆம்
இலக்க பெண்களை வலுவூட்டுதல் சட்டம் ஆகியவை இந்தப் பயணத்தின் முக்கிய
மைல்கற்களாகும். வெறுமனே உறுதிமொழிகளை வழங்குவதற்கு அப்பால் சென்று, வலுவான
நிறுவன ரீதியான பாதுகாப்பையும் பால்நிலை சமத்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்கான
அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இவை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, தேசிய மகளிர்
ஆணைக்குழுவை நிறுவுவதன் ஊடாக பெண்களை வலுவூட்டுதல் சட்டத்தை
நடைமுறைப்படுத்துவது, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான அத்தியாவசிய
அடித்தளத்தை வழங்குகின்றது.
எனினும், சட்டங்களும் கொள்கைகளும் திறம்பட நடைமுறைப்படுத்தப்படும் போதே அவை
சமூகத்தில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தையும் நன்மைகளையும் ஏற்படுத்துகின்றன. குடும்ப
வன்முறைத் தடுப்புச் சட்டம், குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களையும்
சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான சட்டம், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகப்
பிரிவுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட சேவைகள் உள்ளிட்ட முக்கியமான
சட்ட மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்புகள் இலங்கையில் ஏற்கனவே காணப்படுகின்றன.
இந்தப் பொறிமுறைகள் ஒன்றோடொன்று சிறப்பாக இணைந்து செயற்படுவதையும்,
போதுமான வளங்களைப் பெற்றிருப்பதையும், ஒவ்வொரு பெண்ணும் இச்சேவைகளை
எளிதாக அணுகக்கூடியதாக இருப்பதையும் உறுதிப்படுத்தி, எல்லா இடங்களிலும்
பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எமது உடனடிப் பொறுப்பாகும்.
அதேவேளை, இன்னமும் நிலவும் சட்ட மற்றும் நடைமுறை இடைவெளிகளை அடையாளம்
கண்டு ஏற்றுக்கொள்வதும் அவசியமாகும். குறிப்பாக, இணையவழியில் பெண்களையும்
சிறுமிகளையும் இலக்காகக் கொண்டு அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தின் மூலம்
மேற்கொள்ளப்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (Technology-Facilitated
Gender-Based Violence – TFGBV) உள்ளிட்ட அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும்
வலுவான பாதுகாப்பை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்முறையைத் தடுப்பதும் இதற்குச் சமமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வன்முறை
என்பது உடல்ரீதியான தாக்குதல் இடம்பெறுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே
ஆரம்பமாகின்றது. சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள தீங்கு விளைவிக்கும் சமூக
நெறிமுறைகள் வன்முறையைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி அதனைத் தொடரச்
செய்கின்றன. இணையவழித் துன்புறுத்தல்கள், வற்புறுத்தல்கள் மற்றும் சமமற்ற அதிகார
உறவுகளை நியாயப்படுத்தும் அன்றாட மனப்பான்மைகளிலும் இத்தகைய வன்முறைக்கான
அடிப்படைகள் வேரூன்றியுள்ளன.
வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்புகள் வலுவான
பொதுமக்கள் கலந்துரையாடலுடன் இணைக்கப்பட வேண்டும். பெண்களை மதித்தல்,
பாதுகாத்தல், அன்பு செலுத்துதல் மற்றும் அவர்களது கௌரவத்தைப் பேணுதல் தொடர்பான
ஆழமாக வேரூன்றிய பண்பாட்டு விழுமியங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. சம்மதம்
(Consent) தொடர்பான புரிதலுடைய பிள்ளைகளை உருவாக்குவதற்கும், வன்முறையை
உறுதியாக நிராகரிக்கும் சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கும், நேர்மறையான மாற்றத்தை
ஏற்படுத்தும் செயற்பாட்டுப் பங்காளிகளாக ஆண்களையும் சிறுவர்களையும்
ஈடுபடுத்துவதற்கும் இந்த விழுமியங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.
வன்முறையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் அதனைத் தவிர்ப்பதற்காகவும்
மாத்திரம், எந்தவொரு பெண்ணும் தான் உடை அணியும் விதம், பயணம் செய்யும் முறை,
தொழில் புரியும் விதம் அல்லது வாழும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்குத்
தள்ளப்படக்கூடாது.
இவ்வாண்டுக்கான தேசிய கருப்பொருளான “#நீதிஎனதுஉரிமை: பால்நிலை
அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்” என்பது
பெருமிதத்திற்குரிய உறுதிமொழியாக இருப்பதுடன், உடனடி நடவடிக்கைக்கான
அழைப்பாகவும் அமைகின்றது.
முன்னேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் ஆற்றலைத் தீர்க்கமானதும்
நடைமுறைசார்ந்ததுமான செயற்பாடுகளாக மாற்றுவதற்கு அரச நிறுவனங்கள், சிவில் சமூக
அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் உடனடியாக ஒன்றிணைய வேண்டும். எமது
ஒத்துழைப்பு டிசம்பர் 10ஆம் திகதியுடன் முடிவடைந்துவிடக்கூடாது. மாறாக, ஒவ்வொரு
பொலிஸ் நிலையத்திலும், வைத்தியசாலையிலும், நீதிமன்றத்திலும், டிஜிட்டல் தளத்திலும்,
ஒவ்வொரு அயல்சமூகத்திலும் அது அன்றாடம் செயற்பாடுகளின் மூலம் நிரூபிக்கப்பட
வேண்டும்.
பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் தொடர்பான தேசிய கொள்கைக்கு
தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளை வழங்குவதன் மூலமும், பெண்களை வலுவூட்டுதல்
சட்டம் மற்றும் அதன் மூலோபாய செயற்திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதன்
மூலமும், ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA) இந்த முயற்சிகளில் இலங்கை
அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளது. இந்தச் சட்ட ரீதியான மைல்கற்களை நிலையானதும்
முன்னேற்றகரமானதுமான மாற்றங்களாக மாற்றுவதற்கு தேசிய பங்காளர்களுடன் இணைந்து
தொடர்ந்து செயற்படுவதில் நாம் உறுதியாக உள்ளோம்.
இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த வெற்றிகளை நாம்
அங்கீகரித்து, அவற்றை அடித்தளமாகக் கொண்டு முன்னேற வேண்டும். அதேவேளை,
இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளைப் பூர்த்தி செய்வதற்கான கூட்டுத்
துணிச்சலையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உண்மையான வெற்றி என்பது வன்முறைக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை குறையும்
போதும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி உதவி நாடி முன்வரும் போதும்,
ஒவ்வொரு பெண்ணும் சிறுமியும் முழுமையான கௌரவத்துடனும் சுதந்திரத்துடனும்
வாழக்கூடிய நிலை உருவாகும் போதுமே அளவிடப்படும்.
நீதி என்பது ஒரு பெண் முடிவில்லாமல் போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக
இருக்கக்கூடாது; மாறாக, அவள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கக்கூடிய ஓர் உரிமையாக இருக்க
வேண்டும்.
#நீதிஎனதுஉரிமை என்ற பிரச்சாரத்தின் மூலம் வழங்கப்படும் உறுதிமொழி இதுவே. இதனை
நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

































