Nov 25, 2026 - 05:31 PM

இலங்கையில் சமூக நல்லிணக்கத்தை
வலுப்படுத்தும் நோக்கில், அரச துறை, தனியார் துறைப் பணியிடங்கள்
மற்றும் சமூகங்களுக்கிடையிலான உரையாடல்களையும்
கலந்துரையாடல்களையும் வலுப்படுத்திய இரு வருட கூட்டுத்திட்டத்தின்
நிறைவு விழாவை ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசாங்கமும்
இணைந்து கொண்டாடின. ‘இலங்கையில் சமாதானம் மற்றும்
நெருக்கடித்தடுப்பிற்கான சமூக உரையாடல்’ என்ற செயற்திட்டத்தின்
ஊடாக, ஊழியர்களும் சமூகங்களும் தங்களது பிரச்சினைகளை
முன்வைப்பதற்கும், தமது வாழ்க்கையைப் பாதிக்கும் தீர்மானங்களை
வடிவமைப்பதில் பங்களிப்புச் செய்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
தெற்காசியாவிலேயே முதற்தடவையாக அரச துறையில் சமூக
உரையாடலை முன்னெடுப்பதற்கான முதலாவது தேசியக் கட்டமைப்பு
நிறுவப்பட்டு ‘அரச சேவையில் சமூக உரையாடல் தொடர்பான பிரகடனம்’
ஏற்றுக்கொள்ளப்பட்டமை இத்திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக
அமைந்தது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் உருவான அழுத்தங்களுக்குப்
பதிலளிக்கும் வகையில் இந்தக் கூட்டுத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.
பொருளாதார மீட்சி தொடர்பான செயற்பாடுகளின்போது அதிகரித்த
வரிகள் மற்றும் பொருட்களின் விலைகள், வாங்கும் திறன்/ கொள்வனவுத்
திறன் வீழ்ச்சி, தொடர்ச்சியாக நிலவிய வறுமை ஆகியவற்றின்
காரணமாகக் குடும்பங்கள் எதிர்கொண்ட அழுத்தங்கள் தொடர்ந்து
நீடித்தன. உரையாடலின் ஊடாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும்,
முரண்பாடுகள் தீவிரமடைவதைத் தடுக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய
பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும் அரசாங்கம், தொழில்
வழங்குநர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகங்களை இத்திட்டம்
ஒன்றிணைத்தது.
இத்திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் அரசாங்கம், தனியார் துறை, சிவில்
சமூகம், சமூக அமைப்புகள், பெண்கள் மற்றும் இளைஞர் குழுக்கள்,
அபிவிருத்திப் பங்காளர்கள் ஆகிய தரப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி,
இத்திட்டத்தின் பெறுபேறுகளை மீளாய்வு செய்ததுடன், செயற்திட்டக்
காலப்பகுதிக்கு அப்பாலும் இந்த உரையாடலை எவ்வாறு தொடர்ச்சியாக
முன்னெடுப்பது என்பது குறித்தும் கலந்துரையாடினர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய இலங்கைக்கான ஐக்கிய நாடுகள்
சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அன்ட்ரே பிராஞ்ச் (Marc-André
Franche), “இலங்கையின் பொருளாதார மீட்சியானது மேம்பட்ட அரச
சேவைகள், பணியிடங்களில் மேலும் நியாயமான சந்தர்ப்ப நிலைமைகள்
மற்றும் தமது எதிர்காலத்தை வடிவமைப்பதில் சமூகங்கள் அதிக
வாய்ப்புகளைப் பெறுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.
பிரச்சினைகள் தீவிரமடைந்து பிளவுகளாக மாறுவதற்கு முன்னரே
அவற்றுக்குத் தீர்வுகாண மக்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சியின்
மையமாக, இத்திட்டம் உரையாடலை முன்வைத்துள்ளது. மக்களுக்குச்
செவிசாய்ப்பதுடன் நின்றுவிடாமல், அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள்
தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இப்போது எம்மிடம்
முன்வைக்கப்பட்டுள்ள பொறுப்பாகும். இதன்மூலம், தமது
பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடைப்பதை மக்கள் உணர்வதுடன், தமக்குச்
சேவையாற்றும் நிறுவனங்கள் மீதும் நம்பிக்கை கொள்ள முடியும்,” எனத்
தெரிவித்தார்.
முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணுதல், நிறுவனங்களுக்கிடையிலான
ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும்
செயற்பாடுகளை முன்னெடுத்தல் ஆகியவற்றுக்காக எவரையும்
புறக்கணிக்காத, அனைவரையும் உள்ளடக்கிய உரையாடல்களையும்
கலந்துரையாடல்களையும் ஊக்குவிப்பதை பிரதான நோக்கமாகக்
கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிலைபேறான
அபிவிருத்தி இலக்குகள் நிதியத்தின் (UN Sri Lanka SDG Fund) நிதிப்
பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம், சர்வதேச தொழிலாளர்
அமைப்பு (ILO), யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல்
மற்றும் கலாசார அமைப்பு (UNESCO), ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்
(UNFPA) ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அரச துறையில் சமூக உரையாடலை முன்னெடுத்தல்
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற
அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தப்பட்ட இத்திட்டம், இலங்கையில்
சுமார் 1.4 மில்லியன் அரச ஊழியர்களிடையே உரையாடலுக்கான
வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது.
பணியிட மட்டம், துறை/பிரிவு மட்டம் மற்றும் தேசிய மட்டம் என மூன்று
நிலைகளைக் கொண்ட பொறிமுறையின் ஊடாகப் பிரச்சினைகளை
முன்வைக்க வழிவகுக்கப்பட்டது. அந்தவகையில் முதல்நிலையில், பதவி
உயர்வுச் செயன்முறைகள் முதல் பணியிடப் பாதுகாப்பு வரையிலான
நிறுவனங்களின் உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பணியிட
மன்றங்கள் உதவுகின்றன. பணியிடமன்ற மட்டத்தில் தீர்க்க முடியாத
பிரச்சினைகள் இரண்டாவது நிலையிலுள்ள துறைசார் மன்றங்களில்
பரிசீலிக்கப்படுகின்றன. பல துறைகளைப் பாதிக்கும் பிரச்சினைகள்
மற்றும் மத்திய அரசாங்க அதிகாரிகளின் தலையீடு தேவைப்படும்
விடயங்கள் தேசிய மன்றத்தில் பரிசீலிக்கப்படுகின்றன. இத்திட்டத்தின்
ஊடாக தேசிய அரசசேவை சமூக உரையாடல் மன்றம்
ஆரம்பிக்கப்பட்டதுடன், 87 பணியிட மன்றங்களும் 7 துறைசார்
மன்றங்களும் நிறுவப்பட்டன.
மேலும் பாதுகாப்பான, நியாயமான மற்றும் அனைவரையும்
உள்ளடக்கிய பணியிடங்களை ஊக்குவித்தல்
இலங்கை தொழில் வழங்குநர்கள் சம்மேளனம் (EFC), ஐக்கிய நாடுகள்
உலகளாவிய உடன்படிக்கை இலங்கை வலையமைப்பு (UN Global Compact
Network Sri Lanka), இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் (NCCSL) மற்றும்
தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை (NLAC) ஆகியவற்றுடனான
கூட்டாண்மைகளின் ஊடாக, பணியிடங்களில் பால்நிலை சமத்துவத்தை
மேம்படுத்துவதற்கும், பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கும்
அவற்றுக்குப் பதிலளிப்பதற்கும், முறைப்பாடுகள் மற்றும்
பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பொறிமுறைகளை
வலுப்படுத்துவதற்கும், பணியிடங்களில் பெண்களின் பங்கேற்பையும்
தலைமைத்துவத்தையும் மேம்படுத்துவதற்கும் இத்திட்டம் ஆதரவளித்தது.
அத்துடன், பால்நிலை உணர்திறன் கொண்ட பணியிட நடைமுறைகளை
வலுப்படுத்துவதற்காகப் பெருந்தோட்டத் துறையின் சிரேஷ்ட
முகாமையாளர்களும் களமட்ட அதிகாரிகளும் இத்திட்டத்தில்
இணைத்துக்கொள்ளப்பட்டனர். தொழிலாளர் முரண்பாடுகள் தொடர்பான
வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும்போது,
முரண்பாடுகளைத்தீர்ப்பதற்கான மாற்றுத் தீர்வு முறைகள்
ஒருங்கிணைக்கப்படுவதையும், பால்நிலை சார்ந்த காரணிகள் கருத்தில்
கொள்ளப்படுவதையும் உறுதிப்படுத்துவதற்காகத் தொழிலாளர்
நீதிமன்றங்களின் நீதிபதிகளும் இச்செயற்பாடுகளில்
ஈடுபடுத்தப்பட்டனர். இம்முயற்சிகள் அனைத்தும் அனைவரையும்
உள்ளடக்கிய சமூக உரையாடலை ஊக்குவிப்பதற்கும், பணியிடங்களில்
நியாயம், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவதற்கும்
பங்களித்தன.
தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைகளில் சமூகங்களின்
குரலை வலுப்படுத்துதல்
இலங்கையின் தொழிலாளர் படையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர்
முறைசாராப் பொருளாதாரத் துறையைச் சார்ந்தவர்களாக உள்ள
நிலையில், உள்ளூர் மட்டத் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைகளில்
பெண்கள், இளைஞர்கள் மற்றும் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காத
ஏனைய குழுக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கும் இத்திட்டமானது,
வறுமைப் பகுப்பாய்வு நிலையம் (CEPA), Coalition for Inclusive Impact மற்றும்
வேர்ல்ட் விஷன் லங்கா (World Vision Lanka) ஆகிய அமைப்புகளுடன்
இணைந்து, கம்பஹா, பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 33
சமூக மன்றங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு ஆதரவளித்தது.
கொள்கைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதைச் சிறந்த
முறையில் புரிந்துகொள்வதற்கும், சமூகங்களின் முன்னுரிமைகளை
மாவட்ட மட்டத் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் மிகவும்
பயனுள்ள வகையில் முன்வைப்பதற்கும் 180 இற்கும் மேற்பட்ட மன்ற
உறுப்பினர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் தற்போது
மீன்பிடி, பெருந்தோட்டம் மற்றும் விவசாயத் துறைகளைச் சார்ந்த
சமூகங்கள் தமது பிரச்சினைகளை நேரடியாக மாவட்ட அதிகாரிகளிடம்
முன்வைக்க முடியும். இதன்மூலம், தேசியக் கொள்கை உருவாக்கத்திற்குப்
பங்களிக்கக்கூடிய கலந்துரையாடல்களில் உள்ளூர் சமூகங்களின்
முன்னுரிமைகளையும் தேவைகளையும் இடம்பெறச் செய்வதற்கான
வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ILO, UNFPA மற்றும் UNESCO ஆகிய அமைப்புகள் இணைந்து
நடைமுறைப்படுத்திய இந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுத் திட்டத்தின்
ஊடாக, அரச துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும்
சமூகங்களுக்கிடையில் சமாதானத்துடன் நம்பிக்கையைக்
கட்டியெழுப்புவதற்கும், பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை
முன்வைப்பதற்கும், அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கும் தேவையான பொறிமுறைகளை நிறுவ முடிந்துள்ளது.
இச்சாதனைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும்
இலங்கையில் சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும்
அரசாங்கம், தொழில் வழங்குநர்கள், ஊழியர்கள் மற்றும்
சமூகங்களுக்கிடையிலான தொடர்புகளைத் தொடர்ச்சியாகப் பேணுவது
முக்கியமானதாகும்.
சமாதானம் மற்றும் நெருக்கடி தடுப்புக்கான சமூக உரையாடல் செயற்றிட்டத்திற்கு
(Social Dialogue for Peace and Crisis Prevention project), கனடா (Canada), ஐரோப்பிய
ஒன்றியம் (European Union), ஐக்கிய இராச்சியம் (United Kingdom), ஐக்கிய நாடுகள்
செயலாளர் நாயகத்தின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியம் (UN Secretary-
General’s Peacebuilding Fund) மற்றும் கூட்டு SDG நிதியம் (Joint SDG Fund) ஆகியவற்றின்
ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் இலங்கை SDG நிதியத்தால் (UN Sri Lanka SDG Fund)
நிதியளிக்கப்பட்டது.
புகைப்படக் குறிப்பு - இரு வருட காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ‘இலங்கையில் சமாதானம்
மற்றும் நெருக்கடித்தடுப்பிற்கான சமூக உரையாடல்’ திட்டத்தின் நிறைவு விழாவில் அரசாங்கம்,
தனியார் துறை, சிவில் சமூகம், சமூக அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களின்
பிரதிநிதிகள; கலந்துகொண்டு, இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய சமூக
உரையாடல்களையும் கலந்துரையாடல்களையும் வலுப்படுத்துவதற்காக இத்திட்டத்தின் ஊடாக
அடையப்பட்ட சாதனைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடினர்.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்து
செயற்படும் ஐக்கிய நாடுகள் சபை, எவரையும் புறக்கணிக்காத நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சி
நிரலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. தனது விசேட முகவர் அமைப்புகள், நிதியங்கள்,
திட்டங்கள் மற்றும் அலுவலகங்கள் ஊடாக ஒருங்கிணைந்து செயற்படும் ஐக்கிய நாடுகள் சபை,
தரமான சமூக சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான சமமான வாய்ப்புகள், வலுவான மனித
ஆற்றல்கள், மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட
நிலைபேறானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு
இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறது.
மேலதிக தகவல்களுக்கு: https://srilanka.un.org/

































