Nov 25, 2026 - 06:07 PM

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் (SLICGL), இலங்கையின் முதலாவது மெய்நிகர் மோட்டார் காப்புறுதிக் கோரிக்கை அலுவலகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கையடக்கத் தொலைபேசி மூலம் அணுகக்கூடிய இணையவழித் தளமான இது, வாகன விபத்தொன்றைத் தொடர்ந்து காப்புறுதிக் கோரிக்கையைச் சமர்ப்பிப்பது முதல் அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயல்முறையை வாடிக்கையாளர்களின் கையடக்கத் தொலைபேசிகளிலேயே முன்னெடுக்க வழிவகுக்கிறது. இதன் மூலம், நாடளாவிய ரீதியில் மோட்டார் காப்புறுதித் திட்டங்களைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், வாகனக் காப்புறுதிக் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக நேரில் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, எங்கிருந்தும் எந்த நேரத்திலும் SLICGL நிறுவனத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
வாகன விபத்தொன்றை எதிர்கொள்ளும்போது, மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஆவணப் பணிகள் நிறைந்த செயல்முறைகளையும், காப்புறுதி அலுவலகங்களுக்கு மீண்டும் மீண்டும் நேரில் செல்ல வேண்டிய நிலைமையையும் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் ஆதரவுடன் 64 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டியெழுப்பப்பட்ட நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்பாட்டின் அடிப்படையில், இத்தகைய பாரம்பரிய நடைமுறைகளால் ஏற்படும் தாமதங்களை நீக்கி, விரைவான, வெளிப்படையான மற்றும் வசதியான சேவையை வழங்கும் நோக்கில் SLICGL இந்த டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய சேவைச் செயல்முறை மிகவும் எளிமையானதுடன், அதன் முழுமையான கட்டுப்பாட்டையும் சாரதிகளின் கைகளிலேயே வழங்குகிறது. SLICGL நிறுவனத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆரம்பகட்ட வாகனப் பரிசோதனையை நிறைவு செய்த பின்னர், காப்புறுதிதாரருக்கு பிரத்தியேகமான பாதுகாப்பான இணைய இணைப்பு ஒன்று அனுப்பப்படும். அந்த இணையவழித் தளத்தின் ஊடாக, வாடிக்கையாளர்கள் தமது காப்புறுதிக் கோரிக்கைப் படிவங்களை எளிதாகப் பூர்த்தி செய்யவும், அதற்குத் தேவையான ஆதார ஆவணங்களைப் பதிவேற்றவும், நேரடி நிதித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தமது வங்கிக் கணக்கு விபரங்களைப் பதிவு செய்யவும் முடியும். இதற்காக அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
காப்புறுதிக் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு மேலதிகமாக, வாகனத்தைப் பழுதுபார்க்கும் முழுச் செயல்முறையிலும் அதன் முன்னேற்றம் குறித்த தெளிவான தகவல்களையும் நேரடி உதவிகளையும் இந்தத் தளம் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் பதிவேற்றிய ஆவணங்களை மீள்பார்வையிடவும், காப்புறுதிக் கோரிக்கையின் அனுமதி வழங்கும் கட்டங்களைக் கண்காணிக்கவும், கொடுப்பனவுகளின் முன்னேற்றத்தை நிகழ்நேரத்தில் அறிந்துகொள்ளவும் முடியும். ஏதேனும் சந்தேகங்கள் அல்லது வினாக்கள் எழும்போது, அலுவலக நேரங்களில் உள்ளிணைக்கப்பட்டுள்ள இணையவழி உரையாடல் வசதியின் மூலம் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள காப்புறுதிக் கோரிக்கை அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளவும் முடியும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட பெறுமதி வரம்புகளுக்குள் உள்ள தகுதியான காப்புறுதிக் கோரிக்கைகளுக்கான இறுதிக்கட்ட பழுதுபார்ப்புக்குப் பிந்தைய வாகனப் பரிசோதனையைக்கூட இணையவழியில் மேற்கொள்ள முடியும்.
இலங்கையின் முன்னணி பொதுக் காப்புறுதி நிறுவனமாகத் திகழும் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட், நாட்டின் காப்புறுதித் துறையை நவீனமயப்படுத்தும் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் நீண்டகால டிஜிட்டல் மாற்ற உத்தியின் ஒரு பகுதியாக, ஆறு தசாப்தங்களுக்கும் மேலான நம்பகமான சேவையுடன் நடைமுறைப் பயன்பாட்டுக்கேற்ற நவீன கையடக்கத் தொலைபேசித் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்துள்ளது. காலதாமதத்தையும் சிக்கலான நடைமுறைகளையும் ஏற்படுத்தும் தடைகளை நீக்குவதன் மூலம், நாடளாவிய ரீதியிலுள்ள சாரதிகளுக்கு விரைவானதும் பொறுப்புணர்வுடனும் கூடிய சேவையை வழங்குவதற்கான தனது அர்ப்பணிப்பை நிறுவனம் மேலும் உறுதிப்படுத்துகிறது.
ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட், இலங்கை காப்புறுதித் தொழில் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (IRCSL) பதிவு செய்யப்பட்டு உரிமம் பெற்ற நிறுவனமாகும்.

































