Nov 25, 2026 - 06:14 PM

JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை நிறுவனமான ஜனசக்தி லைஃப், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருவதுடன், சமூக நலன் மற்றும் அர்த்தமுள்ள சமூகப் பணிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2026 டிசம்பர் 13ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள மூன்றாவது ஜனசக்தி லைஃப்–ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் பிரதான அனுசரணையாளராக ஜனசக்தி லைஃப் இணைகிறது. சமூக முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்ட இந்நிகழ்வு ஊடாக, உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மேலும் விரிவுபடுத்துவதில் தனது பங்களிப்பை நிறுவனம் வலுப்படுத்துகிறது.
தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இப்போட்டியின் Title அனுசரணையாளராக இணைந்துள்ள ஜனசக்தி லைஃப், நான்கு பிரிவுகளைக் கொண்ட இப்போட்டிக்கு ஆதரவளிக்கிறது. அவை, சான்றளிக்கப்பட்ட 21.1K அரை மரதன் ஓட்டம், 10K Challengers ஓட்டம், 5K குடும்ப ஓட்டம் மற்றும் 2K ஓட்டம் ஆகியவையாகும். 21.1K, 10K மற்றும் 5K ஓட்டங்களுக்கான பாதைகள், AIMS அமைப்பின் ஒத்துழைப்புடன் World Athletics International Measurement Programme இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கொழும்பின் பிரபலமான அடையாள இடங்கள் சிலவற்றை உள்ளடக்கிய பாதைகளில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஓட்ட அனுபவத்தைப் பங்கேற்பாளர்கள் பெற முடியும்.
4,000 இற்கும் மேற்பட்ட ஓட்டப்போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்நிகழ்வு, போட்டியின் நிறைவுக் கோட்டைக் கடப்பதற்கு அப்பாலும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல், உதவி தேவைப்படும் சிறுவர்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் விளையாட்டு சுற்றுலாத் துறையில் இலங்கைக்குள்ள வாய்ப்புகளை வெளிப்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
இவ்வாண்டு மரதன் ஓட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களின் ஈடுபாட்டையும் மேலும் அதிகரிப்பது அமைந்துள்ளது. உயிர்களைக் காக்கும் இந்த உன்னத நோக்கத்திற்காக இப்போட்டி, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக ஆதரவளிக்கிறது. இந்த முயற்சியின் ஊடாக ஜனசக்தி லைஃப், ஓட்டப்போட்டியில் பங்கேற்பவர்களைத் தாண்டி பரந்துபட்ட மக்களிடமும் இச்செய்தியைக் கொண்டு செல்ல எதிர்பார்க்கிறது. இதன் மூலம் உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களுக்கு உறுப்பு தானம் எவ்வாறு மறுவாழ்வுக்கான வாய்ப்பை வழங்க முடியும் என்பதையும் எடுத்துரைக்கிறது. இலங்கை உறுப்பு தானம் மற்றும் மாற்று சிகிச்சை மன்றத்துடன் (Organ Donation and Transplantation Foundation of Sri Lanka – ODTF) இணைந்து செயற்படுவதன் மூலம், விழிப்புணர்வை விரிவுபடுத்துதல், உறுப்பு தானம் குறித்த தெளிவான உரையாடல்களை ஊக்குவித்தல் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பான பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ODTF அமைப்பின் தகவல்களின்படி, இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் Health Resources and Services Administration (HRSA) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உறுப்பு தானம் செய்யும் ஒருவரின் வாயிலாக எட்டு உயிர்கள் வரை காப்பாற்றப்படலாம். ஒருவரின் ஒற்றைத் தீர்மானம், தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வில் எத்தகைய பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த உன்னத நோக்கத்திற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மூலம் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதுடன், மற்றொருவருக்கு வாழ்வளிக்கும் இந்த உன்னதச் செயலில் அதிகமானோர் பங்கேற்கவும் ஜனசக்தி லைஃப் ஊக்கமளிக்க எதிர்பார்க்கிறது.
நிறுவனத்தின் தொடர்ச்சியான ஆதரவு குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனசக்தி லைஃப்பின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே, “ஜனசக்தி லைஃப்பைப் பொறுத்தவரையில், உயிர்களைப் பாதுகாப்பதுடன் எமது சேவைகளைப் பெறும் சமூகங்களில் அர்த்தமுள்ளதும் நீண்டகாலம் பயனளிக்கக்கூடியதுமான மாற்றத்தை ஏற்படுத்துவதும் எமது பொறுப்பாகும் என நம்புகிறோம். மரதன் ஓட்டத்தில் எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியும் உறுதி, நோக்கம் மற்றும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இவ்வாண்டு, உயிர்களைக் காப்பாற்றவும் எதிர்காலங்களை மாற்றவும் வல்ல மனிதநேயத்தின் உன்னத வெளிப்பாடான உறுப்பு தானத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்த நோக்கத்தை மேலும் விரிவுபடுத்துவதில் நாம் பெருமையடைகிறோம். ஜனசக்தி லைஃப் – ICA சர்வதேச அரை மரதன் ஊடாக, தனிப்பட்ட சாதனையை இலக்காகக் கொண்டு மாத்திரமன்றி, அதனைத் தாண்டிய ஒரு உயரிய நோக்கத்திற்காக ஓடுமாறு ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் அழைப்பு விடுக்கிறோம். அதாவது, விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மனிதநேயத்தையும் அக்கறையையும் ஊக்குவித்தல் மற்றும் உயிர்களைக் காக்கும் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அதிகமான இலங்கையர்கள் உணரச் செய்தல் என்பதே அந்த நோக்கமாகும். ஏனெனில், மரதன் ஓட்டத்தின் உண்மையான பெறுமதி நாம் கடக்கும் தூரத்தினால் மாத்திரம் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, எம்மால் ஏற்படுத்தப்படும் மாற்றத்திலேயே அது தங்கியுள்ளது. உங்கள் ஓட்டம் நிறைவுக் கோட்டுடன் முடிவடையாமல், அதற்கும் அப்பால் தொடரட்டும். உங்கள் வாழ்நாளைக் கடந்தும் உங்கள் நற்பணி நிலைத்திருக்கட்டும்” என்றார்.
தனிநபர் ஓட்டப்போட்டியாளர்கள் மற்றும் நிறுவன அணிகளுக்கான பதிவுகள் 2026 நவம்பர் 30ஆம் திகதி வரை www.icainternationalmarathon.com என்ற இணையத்தளத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும். போட்டி ஆனது காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும். பங்கேற்பாளர்கள் காலை 5.00 மணியளவில் நிகழ்விடத்திற்கு வருகை தர வேண்டும்.
ஜனசக்தி லைஃப் பற்றி
JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், 1994 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு வலுவூட்டி வருகிறது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் (IRCSL) உரிமம் பெற்றுள்ள இது, நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

































