Nov 26, 2026 - 08:52 AM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று, வீதி எல்லைக்கோட்டிற்குள் மாநகர சபையின் அனுமதியின்றிக் கட்டுமானங்களை மேற்கொண்டிருந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குறித்த அனுமதியற்ற கட்டுமானத்தை அகற்றுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, பொலிஸாரின் முன்னிலையில் மாநகர பிரதம பொறியியலாளர் தலைமையிலான மாநகர உத்தியோகத்தர்கள் குழுவினரால் குறித்த வீதி எல்லைக்கோட்டில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற கட்டுமானம் நேற்று (25) அகற்றப்பட்டது.
இந்த அனுமதியற்ற கட்டுமானத்தை அகற்றும் நடவடிக்கை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அக்கட்டுமானத்துடன் இணைந்ததாகப் பிரதான வீதியின் மழைநீர் வழிந்தோடும் வெள்ள வாய்க்காலும் அத்துமீறித் தடுக்கப்பட்டிருந்தமை தொடர்பில் மாநகர முதல்வர் வி. மதிவதனிக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
இம்முறைப்பாட்டிற்கு அமைவாகக் குறித்த பகுதிக்கு நேரில் கள விஜயம் செய்த முதல்வர் மதிவதனி, நீரோட்டத்தைத் தடை செய்யும் வகையில் காணப்பட்ட தடைகளை உடனடியாக அகற்றுமாறு பொதுச்சுகாதார பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், நீதிமன்ற உத்தரவின் கீழ் அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றப்படும் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.

































