Nov 26, 2026 - 10:43 AM

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறு வீடுகளை உடைத்து 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் 'அத்திடிய கூரா' என அழைக்கப்படும் சந்தேகநபர் படோவிட்ட பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் சுமார் ஒரு வருட காலப்பகுதிக்குள் இத்திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேகநபரால் தொலைக்காட்சிப் பெட்டிகள், கசெட் இயந்திரங்கள், மடிக்கணினிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
கல்கிஸ்ஸை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய படோவிட்ட பகுதியில் வைத்துச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த வீடு உடைப்புச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவரால் திருடப்பட்டுக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த பொருட்களை கல்கிஸ்ஸை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து மீட்பதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த பொருட்களை விற்பனை செய்து பெற்றுக்கொண்ட பணத்தைச் சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்காகப் பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

































