Nov 26, 2026 - 01:14 PM

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜயசிங்க தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையிடம் வினவியபோது, அவர் தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ள போதிலும், தொடர்ந்தும் தனது பதவிக்கான கடமைகளில் ஈடுபட்டு வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவர் பதவி விலகுவதற்கான உறுதியான காரணங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.
2024ஆம் ஆண்டின் இறுதியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், மேல் மாகாண ஆளுநரினால் இப்பதவிக்கு காமினி ஜயசிங்க நியமிக்கப்பட்டிருந்தார்.
தனது பதவிக் காலத்தில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்துவதைத் தடுப்பதற்காகத் திடீர் சோதனைகளை முன்னெடுத்ததுடன், 'Clean Sri Lanka' வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்துகளின் ஒழுக்கம் மற்றும் தரத்தை உயர்த்துவதற்கு அவர் பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

































