Nov 26, 2026 - 01:33 PM

2026 ஒக்டோபர் 7-8 திகதிகளில் நடைபெற்ற 3வது சர்வதேச தரவு அகழ்வு மற்றும் தகவல் பாதுகாப்பு மாநாடு (Conference on Data Mining and Information Security - ICDMIS 2026), SLIIT இணையேற்பாட்டில் இடம்பெற்றது. தரவு அகழ்வு மற்றும் தகவல் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காக, இலங்கை, இந்தியா, சேர்பியா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை இந்த மாநாடு ஒன்றிணைத்தது.
சர்வதேச அறிவு ஆராய்ச்சி அறக்கட்டளை, இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள Eminent College of Management and Technology (ECMT) மற்றும் SLIIT ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தது. ஒக்டோபர் 7 அன்று SLIIT வளாகத்தில் மாநாடு தொடங்கியது, அதைத் தொடர்ந்து ஒக்டோபர் 8 அன்று இணையவழி தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன.
இந்த மாநாட்டிற்கு 881 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன, அவற்றில் 217 கட்டுரைகள் விளக்கக்காட்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளும் Springer Nature இன் Lecture Notes in Networks and Systems (LNNS) தொடரில் வெளியிடப்படும். ஒரு சுவரொட்டி விளக்கக்காட்சி அமர்வு, இளங்கலை ஆராய்ச்சியாளர்கள் தங்கள் படைப்புகளை சர்வதேச கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து சமர்ப்பிக்க வழிவகுத்தது.
முக்கிய பேச்சாளர்களில் சேர்பியாவின் Singidunum பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளுக்கான துணை முதல்வர் பேராசிரியர் மிலான் துபர்; அமெரிக்காவின் டெக்சாஸ் Trinity பல்கலைக்கழகத்தின் கலாநிதி ஈவா துபர்; மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அறிவுச் சபையின் பணிப்பாளர் கலாநிதி அமித் ஜோஷி ஆகியோர் அடங்கியிருந்தனர். பங்கேற்பாளர்களில் இந்தியாவின் Eminent Group of Colleges இன் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சுரஜித் கூன்; SLIIT மாத்தறை மையத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் பீடாதிபதி கலாநிதி பிரசன்ன சுமதிபால; மற்றும் இந்தியாவின் Sister Nivedita பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி அபிஷேக் பட்டாச்சார்யா ஆகியோர் அடங்கியிருந்தனர்.
SLIIT கணினித் துறையின் பிரதித் துணைவேந்தர் பேராசிரியர் நுவான் கோத்தாகொட கூறுகையில், “முன்பெல்லாம் தரவு அகழ்வு மற்றும் தகவல் பாதுகாப்பு ஆகிய இரண்டும் கணினித் துறையின் வெவ்வேறு பிரிவுகளாகக் கருதப்பட்டன. ஆனால் இன்று, அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன,” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை உருவாக்கத் தெரிந்திருப்பது மட்டும் போதாது. அதை எவ்வாறு பாதுகாப்பது, நிர்வகிப்பது மற்றும் அதன் செயல்பாட்டை எவ்வாறு விளக்குவது என்பதும் நமது பட்டதாரிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற மாநாடுகள், இத்தகைய நவீன ஆராய்ச்சி முன்னெடுப்புகளை நமது வகுப்பறைகளுக்குக் கொண்டு வருகின்றன,” என்று குறிப்பிட்டார்.
இந்தியாவிலிருந்து இதன் ஏற்பாட்டு அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கலாநிதி அபிஷேக் பட்டாச்சார்யா கூறுகையில், “அரசாங்கங்களும் தொழில் நிறுவனங்களும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். ஆனால், சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சியாளர்களுமே முக்கிய பங்காற்றுகின்றனர். ICDMIS என்பது, ஆராய்ச்சியின் தேவை கருதி இரண்டு கல்வி நிறுவனங்களும் இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்ததற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒன்றோடொன்று இணைந்த இன்றைய உலகில் கல்வித்துறை ஆற்ற வேண்டிய பங்கு இதுவே. இந்தச் சூழலை ICDMIS தொடர்ந்து ஊக்குவிக்கும்,” என்று தெரிவித்தார்.
தனது தொழில்நுட்ப அமர்வுகள், சிறப்புரைகள் மற்றும் மாணவர் ஆய்வு விளக்கக்காட்சிகள் மூலம், ICDMIS 2026 அறிவுப் பரிமாற்றம் மற்றும் ஆய்வு ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை வழங்கியது. சர்வதேச கல்விசார் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும், தரவு அகழ்வு மற்றும் தகவல் பாதுகாப்பில் உள்ள நடைமுறைச் சவால்களை எதிர்கொள்ளும் ஆய்வுகளுடன் கணினிக் கல்வியை இணைப்பதற்கும் SLIIT கொண்டுள்ள அர்ப்பணிப்பை அதன் இணை ஏற்பாட்டு வகிபாகம் பிரதிபலிக்கிறது.

































