Nov 26, 2026 - 01:57 PM

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலொன்றிடம் T-56 ரக துப்பாக்கி ஒன்றையும் 30 தோட்டாக்களையும் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்ட கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
டுபாய் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட 26 வயதுடைய இச்சந்தேகநபர், இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் பொறுப்பேற்கப்பட்டார்.
இவர் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08ஆம் திகதி குறித்த துப்பாக்கியையும் தோட்டாக்களையும் விற்பனை செய்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

































