Nov 26, 2026 - 03:34 PM

இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் குழுமமான Sunshine Holdings PLC, 2026 செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் (1HFY27) 40.2 பில்லியன் ரூபாயை ஒருங்கிணைந்த வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 24.4% குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இக்குழுமத்தின் ஒட்டுமொத்த வரிக்கு பிந்தைய இலாபமும் (PAT) கடந்த ஆண்டை விட 44.3% அதிகரித்து 3.7 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. குழுமத்தின் பன்முகப்படுத்தப்பட்ட வணிகப் பிரிவுகளான சுகாதாரம் (Healthcare), நுகர்வோர் பொருட்கள் (Consumer) மற்றும் விவசாய வணிகம் (Agribusiness) ஆகியவற்றின் வலுவான தன்மை மற்றும் மீளெழுச்சித் திறன் ஆகியவையே இதற்கு முதன்மைக் காரணங்களாகும்.
இக்குழுமத்தின் மொத்த வருவாயில் சுகாதாரத் துறையின் பங்களிப்பு கணிசமானதாக இருந்ததுடன், அது மொத்த வருவாயில் 49% ஆகும். அதேவேளையில், நுகர்வோர் துறை 37% மற்றும் விவசாய வணிகத் துறை 14% என்ற அளவில் முறையே குழுமத்தின் மொத்த வருவாயில் பங்களிப்பு செய்துள்ளன. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், குழுமத்தின் மொத்த இலாபம் (Gross Profit) 11.7% அதிகரித்து 11.5 பில்லியன் ரூபாய் வரை வளர்ச்சியடைந்துள்ளதுடன், மொத்த இலாப வரம்பு (Gross Profit Margin) 28.7% மட்டத்தில் காணப்பட்டது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 31.9% ஆகப் பதிவாகியிருந்த மொத்த இலாப வரம்பு வீழ்ச்சியடைந்ததற்கு, சுகாதாரத் துறை எதிர்கொண்ட மருந்து விலைகள் மீதான தாக்கங்கள் மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமை ஆகியவையே முதன்மைக் காரணங்களாகும்.
இக்குழுமத்தின் செயல்பாட்டு இலாபம் (EBIT), கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 10.5% அதிகரித்து 6.1 பில்லியன் ரூபாயாக வளர்ச்சியடைந்துள்ளதுடன், அதன் செயல்பாட்டு இலாப வரம்பு (EBIT Margin) 1HFY26 காலப்பகுதியில் பதிவாகியிருந்த 17.0% உடன் ஒப்பிடும் போது 15.1% ஆகக் காணப்பட்டது. நிகர நிதி வருமானத்தின் (Net Finance Income) அதிகரிப்பு மற்றும் குழுமம் தனது வரிக்கு முந்தைய இலாபத்திலிருந்து குறைந்த சதவீதத்தை நிறுவன வருமான வரியாகச் செலுத்தியமை ஆகியவை குழுமத்தின் இலாபத்தன்மையை வலுப்படுத்துவதற்குப் பங்களிப்பு செய்துள்ளன. இதன் காரணமாக, வரிக்கு பிந்தைய இலாப வரம்பு (PAT Margin) கடந்த ஆண்டில் நிலவிய 8.0% இலிருந்து 9.2% ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், இரண்டாவது காலாண்டில் இக்குழுமம் மிகவும் நிலையான நிதி வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், அங்கு வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 32.0% அதிகரித்து 21.6 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. அதேவேளையில், வரிக்கு பிந்தைய இலாபமும் 82.4% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் 2.3 பில்லியன் ரூபாயாக மாறியுள்ளது.
குழுமத்தின் நிதிப் பெறுபேறுகள் குறித்து கருத்துத் தெரிவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஷியாம் சதாசிவம், "எமது பன்முகப்படுத்தப்பட்ட வணிக மாதிரியின் வலுவான தன்மையையும், எமது முக்கிய வணிகப் பிரிவுகளில் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான எமது திறனையும் இந்த முதலாம் பாதியின் நிதிப் பெறுபேறுகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. மருந்து விலை கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் மற்றும் அந்நிய செலாவணி ஏற்ற இறக்கங்கள் எமது இலாப வரம்புகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதிலும் மூலோபாய வணிக விரிவாக்கத்திலும் எம்மால் தொடர்ந்து கவனம் செலுத்த முடிந்தது. உள்நாட்டு மருந்து உற்பத்தி, டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட வணிகங்களில் நாம் மேற்கொண்டுள்ள முதலீடுகள், எமது நீண்டகால போட்டித்திறனை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முக்கியமான உன்னத படிகளாகும். பங்குதாரர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நிலையான மதிப்பை வழங்குவதற்கும், வலுவான வணிகங்களை உருவாக்குவதற்கும் நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளோம்" என தெரிவித்தார்.
சுகாதாரப் பிரிவு
இக்குழுமத்தின் சுகாதாரப் பிரிவானது, 2027ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் 19.6 பில்லியன் ரூபாயை வருவாயாகப் பதிவு செய்துள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 13.3% வளர்ச்சியாகும். இரண்டாவது காலாண்டில் இத்துறையின் வளர்ச்சி மேலும் அதிகரித்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் 20.5% இனால் உயர்வடைந்தது. இருப்பினும், மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் தயாரிப்புகள் மீது ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, சுகாதாரத் துறையின் செயல்பாட்டு இலாப வரம்பு 1HFY26 இல் நிலவிய 13.1% இலிருந்து 11.2% ஆகக் குறைந்துள்ளது. பிரதானமாக செயல்பாட்டு மாதிரியில் ஏற்பட்ட மாற்றங்கள், சில முக்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து கிடைத்த தயாரிப்பு இருப்புகள் குறைவாக இருந்தமை மற்றும் ஒழுங்குமுறை தாக்கங்களால் ஏற்பட்ட இருப்பு பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக, மருந்து விநியோகப் பிரிவின் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24.0% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளையில், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஹெல்த்கார்ட் விநியோகம் ஆகிய பிரிவுகள் முறையே 19.9% மற்றும் 4.1% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஹெல்த்கார்ட் பார்மசி மருந்தக வலையமைப்பின் வருவாய் நிலையான மட்டத்தில் காணப்பட்டது. அரசாங்கத்தின் மருந்து விநியோகக் கட்டளைகளை உரியவாறு பேண முடிந்ததன் காரணமாக, குழுமத்தின் மருந்து உற்பத்தி வணிகமான லீனா மெனுஃபாக்சரிங் பிரைவேட் லிமிடெட் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35.1% உயர் வருவாய் வளர்ச்சியை ஈட்டி, குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
இக்காலப்பகுதியில், இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான Zydus Lifesciences Limited உடன் வணிகக் கூட்டுறவை ஏற்படுத்தியதன் மூலம், உள்நாட்டு மருந்து உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை சன்ஷைன் ஹோல்டிங்ஸ் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கூட்டுறவின் ஊடாக, சர்வதேச உற்பத்தித் தரங்களுக்கு அமைய மாத்திரைகள் (Tablets) மற்றும் காப்ஸ்யூல்கள் (Capsules) போன்ற மருந்துகளை உற்பத்தி செய்யும் அதிநவீன தொழிற்சாலை ஒன்றை ஹொரண ஏற்றுமதி பதப்படுத்தும் வலையமைப்பில் நிறுவுவதற்காக, இலங்கையின் முதலீட்டுச் சபையுடன் இருதரப்பு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது.
சுகாதாரத் துறையின் முதலீடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், Sunshine Healthcare Lanka நிறுவனம், ‘Doc990’ சேவையை வழங்கும் Digital Health Pvt Ltd நிறுவனத்தின் 21.92% பங்குரிமையைக் கையகப்படுத்தியுள்ளது. இந்த முதலீடானது தற்போதைய ஆய்வுப் பகுதிக்கு பிந்தைய காலப்பகுதியான, 2026 அக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த மூலோபாய முதலீட்டின் மூலம், குழுமத்தின் தற்போதைய மருந்து விநியோகம், உற்பத்தி மற்றும் நுகர்வோர் வர்த்தக செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தி, டிஜிட்டல் சுகாதாரத் துறையில் தனது வணிக ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கு சன்ஷைன் குழுமத்திற்கு வாய்ப்பு ஏற்படும்.
நுகர்வோர் பிரிவு
பிரதானமாக ஜே.ஏ.பி.சி (JAPC) நிறுவனத்தைக் கையகப்படுத்தியமை மற்றும் தேயிலை ஏற்றுமதி வணிகம் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றின் காரணமாக, நுகர்வோர் துறையானது 1HFY27 காலப்பகுதியில் 15.0 பில்லியன் ரூபாயை வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 53.5% உயர் வருவாய் வளர்ச்சியாகும். இருப்பினும், JAPC நிறுவனத்தைத் தவிர்த்து நுகர்வோர் துறையை மாத்திரம் தனித்து நோக்கும் போது, வர்த்தகநாமத்தைக் கொண்ட தேயிலை வகை மற்றும் தேயிலை ஏற்றுமதிப் பிரிவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காரணமாக, இத்துறையின் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.0% வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 7.8% ஆகப் பதிவாகியிருந்த நுகர்வோர் பிரிவின் செயல்பாட்டு இலாப வரம்பு, இந்த முதலாம் பாதியில் 8.0% ஆகச் சற்று உயர்வடைந்துள்ளது.
வட்டவல தேயிலை வர்த்தக நாமம் வெளிப்படுத்திய உயர் செயல்திறன் காரணமாக வர்த்தக நாமம் செய்யப்பட்ட தேயிலை வணிகத்தின் வருவாய் கடந்த ஆண்டின் தொடர்புடைய காலகட்டத்தை விட 5.6% வளர்ச்சியை பதிவு செய்தது. இதற்கிடையில், கடுமையான போட்டித்தன்மை நிலவும் பிரீமியம் தேயிலை பிரிவில் Zesta வர்த்தக நாமமும் அதன் சந்தை நிலைத்தன்மையை தொடர்ந்து பராமரிக்க முடிந்தது. இதற்கிடையில், இனிப்பு வணிகத்தின் டோஃபி மற்றும் மிட்டாய் தயாரிப்பு பிரிவுகளில் விற்பனை குறைந்தாலும், சூயிங் கம் மற்றும் வேஃபர் தயாரிப்பு வரிசையில் அடைந்த முன்னேற்றம் காரணமாக அந்த பிரிவின் ஒட்டுமொத்த வருவாய் கடந்த ஆண்டை விட 2.2% வளர்ச்சியை பதிவு செய்தது.
1HFY27 காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி வணிகமானது, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25.4% வருவாய் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. முக்கிய வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த கூடுதல் கொள்வனவுக் கட்டளைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தேயிலைத் தயாரிப்புகளுக்கான உயர் தேவை ஆகியவற்றின் காரணமாக, இரண்டாவது காலாண்டில் மாத்திரம் அதன் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 60.9% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
அதேவேளையில், முக்கிய தயாரிப்பு வகைகளில் காணப்பட்ட அதிக தேவை காரணமாக ஜே.ஏ.பி.சி (JAPC) நிறுவனத்தின் பலசரக்கு ஏற்றுமதி வருவாயும் (Spice Export Revenue) 28.6% இனால் வளர்ச்சியடைந்துள்ளது. JAPC நிறுவனம் குழுமத்தின் நிதிப் பெறுபேறுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டதன் மூலம், நுகர்வோர் துறையின் ஏற்றுமதி கோப்புரை (Export Portfolio) மேலும் வலுவடைந்ததுடன், அதன் மூலம் பலசரக்கு ஏற்றுமதித் துறையில் சன்ஷைன் குழுமத்தின் வணிக ஆதிக்கம் மேலும் விரிவடைந்தது. JAPC நிறுவனம் குழுமத்துடன் இணைக்கப்பட்டதன் மூலம் நுகர்வோர் பிரிவின் ஏற்றுமதி வணிகம் மேலும் பலப்படுத்தப்பட்டதுடன், இது சர்வதேச பலசரக்கு ஏற்றுமதி சந்தையில் சன்ஷைன் குழுமத்தின் இருப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஒரு சிறந்த பக்கபலமாக அமைந்தது.
விவசாய வணிக பிரிவு
வட்டவளை பிளான்டேஷன்ஸ் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இக்குழுமத்தின் விவசாய வணிகத் துறையானது, பிரதானமாக Palm Oil வணிகத்தில் அடைந்த முன்னேற்றம் காரணமாக 1HFY27 காலப்பகுதியில் 5.6 பில்லியன் ரூபாயை வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.2% வளர்ச்சியாகும்.
சொந்தப் பயிர் உற்பத்தி அதிகரித்தமையின் பக்கபலத்துடன், Palm Oil வணிகத்தின் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.1% இனால் அதிகரித்து 5.0 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. இருப்பினும், வெளிவாரியாகக் கொள்வனவு செய்யப்பட்ட அறுவடை குறைந்தமை மற்றும் எண்ணெய் பிரித்தெடுப்பு வீதங்கள் வீழ்ச்சியடைந்தமை ஆகியவற்றின் காரணமாக, இரண்டாவது காலாண்டிற்குள் இந்த வளர்ச்சி வேகம் ஓரளவிற்கு மந்தநிலையை வெளிப்படுத்தியது.
பால் உற்பத்தி வணிகமானது (Dairy Business) 561.1 மில்லியன் ரூபாயை வருவாயாகப் பதிவு செய்துள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2.9% சிறிய வீழ்ச்சியாகும். பால் விற்பனை அளவு வீழ்ச்சியடைந்தமை இதற்கு முதன்மைக் காரணமாக அமைந்த போதிலும், தயாரிப்புகளின் விற்பனை விலை உயர் மட்டத்தில் காணப்பட்டமையால் அந்தத் தாக்கம் ஓரளவிற்குத் தவிர்க்கப்பட்டது. கழிவுநீர் முகாமைத்துவ செலவுகள் அதிகரித்ததன் காரணமாக இவ்வணிகம் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்ட போதிலும், இரண்டாவது காலாண்டிற்குள் அதன் செயல்பாட்டுத் திறன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்தியது. அதேவேளையில், Palm Oil வணிகத்தின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்தமையால், விவசாய வணிகத் துறையின் செயல்பாட்டு இலாப வரம்பு, கடந்த ஆண்டில் நிலவிய 49.1% உடன் ஒப்பிடும் போது இந்த முதலாம் பாதியில் 47.8% ஆகப் பதிவாகியுள்ளது.
குறித்த காலப்பகுதியில், சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சன்ஷைன் வில்மார் பிரைவேட் லிமிடெட் (Sunshine Wilmar Pvt Ltd) ஊடாக வட்டவளை பிளான்டேஷன்ஸ் நிறுவனத்தில் தனக்குள்ள பங்குரிமையை 77.02% வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், வட்டவளை பிளான்டேஷன்ஸ் நிறுவனம் லொனாக் டெய்ரி (Lonach Dairy) நிறுவனத்தில் எஞ்சியிருந்த பங்குரிமையையும் கையகப்படுத்தியது. இதன் மூலம், லொனாக் டெய்ரி நிறுவனம் வட்டவளை பிளான்டேஷன்ஸ் நிறுவனத்திற்கு முழுமையாகச் சொந்தமான ஒரு துணை நிறுவனமாக மாறியுள்ளது.

































