Nov 26, 2026 - 04:35 PM

ரோஷன் மஹாநாம மற்றும் உமாரியா சின்ஹவன்சா ஆகியோர் SOS சிறுவர் கிராமங்கள் இலங்கையின் (SOSCVSL) தூதுவர்களாகத் தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றனர். அதனூடாக, பெற்றோரின் அரவணைப்பை இழந்த அல்லது இழக்கும் நிலையிலுள்ள சிறுவர்களை பாதுகாப்பதற்கான தமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளனர். இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் ரொஷான் மஹாநாம நம்பிக்கை நிதியத்தில் நடைபெற்றது.
முன்னாள் கிரிக்கட் வீரரும், ICC போட்டி மத்தியஸ்தருமான ரொஷான் மஹாநாம, SOS சிறுவர் கிராமங்களுடன் தமது பங்காண்மையை சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக தொடர்கின்றார். விருது வென்ற புகழ்பெற்ற பாடகரான உமாரியா சிங்ஹவன்ஸ, தூதுவராக தமது முதல் வருட அர்ப்பணிப்பை மேலும் தொடர்வதற்கு முன்வந்திருந்தார். அவர்கள் ஒன்றிணைந்து, அடுத்த தலைமுறையினரின் நல்வாழ்வையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் ஒவ்வொரு இலங்கையரினதும் ஆதரவைக் கோரும் அழைப்புகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் தமது குரல்கள், தளங்கள் மற்றும் செல்வாக்கை வழங்குகின்றனர்.
அவர்களது ஈடுபாடு பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கும் அப்பால் விரிவடைந்துள்ளது. இரு தூதுவர்களும் இலங்கை SOS சிறுவர் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று சிறுவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதுடன் அவர்களது கதைகளையும் செவிமடுக்கின்றனர். மேலும், நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் முன்னெடுத்து வரும் பணிகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் நிதி திரட்டல் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதுடன், விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறுவர்களின் உரிமைகள், தரமான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அணுகல் ஆகியவற்றிற்காகவும் அவர்கள் குரல் கொடுக்கின்றனர். இத்தகைய தருணங்கள், தாம் கவனிக்கப்படுகின்றோம், செவிமடுக்கப்படுகின்றோம் மற்றும் மதிக்கப்படுகின்றோம் என்பதைச் சிறுவர்களுக்கு நினைவூட்டுவதுடன், பெற்றோரின் அரவணைப்பற்ற சிறுவர்கள் எதிர்கொள்ளும் யதார்த்த நிலைமைகளைப் பொதுமக்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கின்றன.
இந்த பங்காண்மை புதுப்பிப்பு தொடர்பில் SOS சிறுவர் கிராமங்களின் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை கருத்துத் தெரிவிக்கையில், “ரொஷான் மற்றும் உமாரியா ஆகியோர் எமது உயரிய நோக்கத்திற்காகத் தமது பெயர்களை மட்டும் வழங்கவில்லை. அவர்கள் எமது சிறுவர்களுக்காக நேரடியாக முன்வருகின்றனர். எமது கிராமங்களுக்கு நேரில் வருகை தந்து, சிறுவர்களின் உணர்வுகளுக்குச் செவிமடுத்து, தம்மீது அக்கறை கொண்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஒவ்வொரு சிறுவருக்கும் நினைவூட்டுகின்றனர். ஒவ்வொரு சிறுவரும் அன்பு, பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் வளர்வதற்குத் தகுதியானவர்கள் என்ற எமது நம்பிக்கைக்கு அவர்களது புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு உண்மையாக அமைந்துள்ளது. மேலும், அவர்களது சமூக அந்தஸ்தும் முன்மாதிரியும் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் பெருநிறுவனப் பங்காளர்களை எமது இப்பயணத்தில் இணைந்து கொள்ளத் தூண்டும் உந்துசக்தியாக அமைகின்றது.” என்றார்.
இப்புதுப்பிப்பு, விழிப்புணர்வைச் செயலாக மாற்றுவதில் பொது ஆளுமைகளுக்கு உள்ள வல்லமையைப் பிரதிபலிப்பதுடன், ஒவ்வொரு ஆதரவாளருக்கும் பங்காற்ற இடமளிக்கும் கூட்டுப் பொறுப்புணர்வு கொண்ட ஒரு பரந்த இயக்கத்தையும் வலுப்படுத்துகின்றது. மேலும், பொது நன்மைக்காக ஒரு சமூகம் ஒன்றிணையும் போது, எந்தவொரு சிறுவரும் பின்தங்கிவிடாத எதிர்காலத்தை அது எவ்வாறு உறுதி செய்கின்றது என்பதையும் இப்புதுப்பிப்பு எடுத்துக்காட்டுகின்றது.
இலங்கை SOS சிறுவர் கிராமங்களுடன் இணைந்து நிற்பதன் மூலம், ஒவ்வொரு சிறுவரும் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, செழித்து வளர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் சிறப்பானதொரு எதிர்காலத்தைச் சிறுவர்களுக்காக உருவாக்குவதற்குத் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் பெருநிறுவனப் பங்காளர்கள் கைகொடுக்குமாறு இரு தூதுவர்களும் ஊக்குவிக்கின்றனர்.
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் 1981 ஆம் ஆண்டு முதல் பெற்றோரின் அரவணைப்பை இழந்த சிறுவர்களுக்கு நீண்டகால, குடும்பம் போன்ற பராமரிப்பை வழங்கி வருகின்றது. ஆறு சிறுவர் கிராமங்கள், 11 இடங்களில் முன்னெடுக்கப்படும் குடும்ப வலுப்படுத்தல் திட்டங்கள் மற்றும் 04 தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாக, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அன்பு, மரியாதை, பாதுகாப்பு மற்றும் தமது எதிர்காலத்திற்கான திறன்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளுடன் வளர்வதற்கு SOSCVSL ஆதரவளிக்கின்றது. 1981 ஆம் ஆண்டு முதல், மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணத் திட்டங்கள் உள்ளடங்கலாக SOS சிறுவர் கிராமங்களின் ஆதரவினால் 50,000 இற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். தூதுவர்களாக, ரொஷான் மஹாநாம மற்றும் உமாரியா சிங்ஹவன்ஸ ஆகியோர் இம்முயற்சிகளுக்குத் தீவிரமாக ஆதரவளித்து வருகின்றனர்.

































