Nov 26, 2026 - 05:03 PM

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (25) இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள், கொடுப்பனவுகள் மற்றும் அச்சேவைகளின் தொழில்சார் தன்மையை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
ஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் கல்விசார் தொழில்சார் பேரவையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்குரிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
1994ஆம் ஆண்டு ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் ஆசிரியர் சேவையின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்தப் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைய சுமார் 30 வருட காலப்பகுதியில் ஆசிரியர் சேவையின் தொழில்சார் தன்மை மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
அத்துடன், சுபோதினி அறிக்கையில் முன்மொழியப்பட்ட சம்பள முறைக்குரிய ஐந்து நிபந்தனைகளும் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்ட பிரதமர், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து, ஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்குவதுடன், ஆசிரியர் சேவையின் தொழில்சார் தரநிலையையும் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் கல்விசார் தொழில்சார் பேரவையை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஆசிரியர் - அதிபர் சேவை உள்ளிட்ட அனைத்து அரச சேவையிலும் நிலவும் சம்பளம் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைச் சீர்செய்வதற்காக சம்பள மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பணிகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்காகத் தொழிற்சங்கங்களும் தமது கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், ஆசிரியர் – அதிபர் சேவை உள்ளிட்ட அனைத்து அரச சேவையின் சம்பளத்தை மூன்று கட்டங்களாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு 2027 ஜனவரி மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்ட பிரதமர், இவ்வாறான கட்டம் கட்டமான சம்பள அதிகரிப்பு இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வலியுறுத்தினார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கல்விக்காக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை கல்விக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளில் இதுவே மிக உயர்ந்த தொகை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அதேவேளை, அதிபர்களுக்குத் தொலைபேசிக் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் யல்வெல பஞ்ஞாசேகர தேரர், ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

































