Nov 26, 2026 - 08:42 PM

தொழில்முனைவோர் மனப்பான்மையுடன் செயற்படுவதன் மூலம் மட்டுமே ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என GLEC அமைப்பின் ஸ்தாபகரும் தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் வசிக்கும் இலங்கைத் தொழில்முனைவோர் குழுவொன்றைச் சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் பரந்து வாழும் இலங்கைத் தொழில்முனைவோர், தொழில்வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களை ஒரே டிஜிட்டல் தளத்திற்குள் கொண்டு வரும் நோக்கில், 'உலகளாவிய இலங்கைத் தொழில்முனைவோர் ஒன்றியம்' எனப்படும் GLEC டிஜிட்டல் தளம் அண்மையில் கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தொழில்முனைவோர் திலித் ஜயவீரவின் எண்ணக்கருவுக்கு அமைவாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
GLEC டிஜிட்டல் தளம் தொடர்பாக உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தொழில்முனைவோருக்குத் தெளிவூட்டுவதற்கான சர்வதேச மாநாட்டுத் தொடர் அண்மையில் ஜப்பானின் சுகுபா (Tsukuba) நகரில் ஆரம்பமானது.
இதற்கமைய, GLEC வேலைத்திட்டத்தின் ஜப்பான் நிதியத்திற்காக 2.5 மில்லியன் ஜப்பானிய யென் நிதியை நன்கொடையாக வழங்க அந்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தொழில்முனைவோரான நளின் குணசேகர நேற்று நடவடிக்கை எடுத்திருந்தார்.
அந்த நிதித் தொகை GLEC வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக முன்னோடி டிஜிட்டல் உருவாக்குநர் ஹசந்த ரத்நாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
GLEC வேலைத்திட்டத்தின் அடுத்த மாநாடு ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.

































