Nov 26, 2026 - 10:40 PM

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்கு உரித்தான இரண்டு துப்பாக்கிகளை மீண்டும் நாட்டிற்கே கையளிப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுமார் 250 வருடங்களுக்கும் அதிக வரலாற்றை கொண்ட இந்த துப்பாக்கிகள் அந்த நாட்டின் எம்ஸ்டர்டெம் பகுதியிலுள்ள தேசிய அருங்காட்சியகமாக ‘Rijksmuseum’ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தின் ஆய்வாளர்கள் மற்றும் இலங்கை ஆய்வாளர்கள் இணைந்து மிக நீண்ட ஆய்வுகளை நடாத்தியதில், இந்த துப்பாக்கிகள் இலங்கைக்கு சொந்தமானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
18 ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்திற்குக் கொண்டு செல்லப்பட்ட இவற்றைப் போன்றே, இதற்கு முன்னர் 2023 ஆம் ஆண்டிலும் 2 பழங்காலத் துப்பாக்கிகளை அவர்கள் இலங்கையிடம் மீண்டும் ஒப்படைத்திருந்தனர்.
இவ்வாறு இலங்கையிடம் கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளுக்கு ஒத்ததான பாரிய துப்பாக்கிகளையே மீண்டும் இலங்கைக்கு வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
1765ம் ஆண்டு ஒல்லாந்தர் காலப் பகுதியில் கண்டி இராஜ்ஜியத்துடன் நடாத்திய போரின் போது இந்த துப்பாக்கிகளை அவர்கள் கைப்பற்றியுள்ளதாக நம்பப்படுகின்றது.
இவ்வாறு காணப்படும் ஒரு துப்பாக்கியில் கண்டி இராஜ்ஜியத்தின் அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலாசார அடையாளத்தை கொண்ட துப்பாக்கியை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

































