Nov 27, 2026 - 09:07 AM

எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துகொள்வதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தீர்மானமிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (27) நடைபெறவுள்ளது.
இன்று முற்பகல் இந்தக் கூட்டம் கூடவுள்ளதாக அந்த சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வைத்தியர் சமில் விஜேசிங்க, "நாட்டின் வைத்தியசாலைக் கட்டமைப்பிற்குள் பாரிய சேவையை ஆற்றிவரும் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், குறிப்பாக பொருளாதார அநீதிகளுக்குத் தீர்வு வழங்குவதை விடுத்து, குறைந்தபட்சம் அது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தக்கூட அரசாங்கம் தயாராக இல்லாத நிலைப்பாட்டிலேயே உள்ளது.
பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதியிடம் 5 தடவைகளுக்கு மேலும், பிரதமரிடம் இரண்டு தடவைகளும், சுகாதார அமைச்சரிடம் மூன்று தடவைகளும் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். எனினும் எவரும் பேச்சுவார்த்தை நடத்திப் பதிலளிக்கத் தயாராக இல்லை.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே நாம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளோம்.
எதிர்வரும் வாரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதா, 30ஆம் திகதியா அல்லது வேறு தினத்திலா, எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் இன்றே நாட்டு மக்களுக்கு அறிவிக்கத் தயாராக உள்ளோம்" என்றார்.
இதேவேளை, வைத்தியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது நியாயமற்றது என ஜனாதிபதி நேற்று வெளியிட்ட கருத்து குறித்தும் வைத்தியர் சமில் விஜேசிங்க பதிலளித்தார்.
"அடிப்படைச் சம்பள அதிகரிப்பு நல்லதொரு ஆக்கபூர்வமான விடயம் என நாம் தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், 2025-ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்ட அதேவேளையில், வைத்தியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவுகளில் மூன்றிலொரு பங்கு வெட்டப்பட்டது.
அதன் ஊடாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் நாம் நாட்டிற்கு 4,400 கோடி ரூபாவை மிச்சப்படுத்திக் கொடுத்துள்ளோம்.
ஆண்டுதோறும் 10,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதற்காக வரி செலுத்தும் பின்னணியிலேயே, தமக்கு இழைக்கப்பட்ட பொருளாதார அநீதிக்குத் தீர்வு கோரி வைத்தியர்கள் முன்வந்துள்ளனர்.
பேச்சுவார்த்தையின் ஊடாகத் தீர்வு காண முடியும் என ஜனாதிபதி கூறுகிறார்.
ஆனால், பேச்சுவார்த்தை மேசைக்கு வராமல் இந்த அரசாங்கம் தப்பியோடுகிறது. ஒலிவாங்கிக்கு முன்னால் பேசுவதற்கும், நடைமுறையில் நடப்பதற்கும் இடையிலான இந்த முரண்பாட்டிற்கு என்ன காரணம் என்பது எமக்குப் புரியவில்லை" என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

































