Nov 27, 2026 - 01:59 PM

ஓடும் ரயிலின் குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் பயணி ஒருவர் தீபம் ஏற்றி, சங்கு ஊதி வழிபாடு நடத்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி இந்தியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பரவலாகப் பகிரப்பட்டு வரும் அந்தக் காணொளியில், வேட்டி அணிந்து நெற்றியில் திருநீறு பூசிய நபர் ஒருவர், குளிரூட்டப்பட்ட பெட்டியின் இருக்கையில் அமர்ந்தவாறு வழிபாடு செய்கிறார்.
அருகில் வைக்கப்பட்டிருந்த சிறிய மேசையில் சுவாமி படம், மலர்கள், பூஜைப் பொருட்கள் மற்றும் ஏற்றப்பட்ட தீபம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ரயில் சென்று கொண்டிருக்கும்போதே அவர் சங்கு ஊதி ஆரத்தி காட்டும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
நூற்றுக்கணக்கான பயணிகள் பயணிக்கும் மூடப்பட்ட குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் திறந்த தீச்சுடரைப் பயன்படுத்துவது பாரிய தீ விபத்து அபாயத்தை ஏற்படுத்துவதாகப் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
தனிப்பட்ட வழிபாட்டு உரிமை இருந்தாலும், பொதுப் போக்குவரத்துகளில் சக பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது பொறுப்பற்ற செயல் எனவும், குறித்த பயணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தீவிர கவனம் பெற்றதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக 'ரயில் சேவா' (Railway Seva) உத்தியோகபூர்வ சமூக வலைதளக் கணக்கு மூலம் பதிலளித்துள்ள ரயில்வே அதிகாரிகள், சம்பவம் நடந்த திகதி, நேரம், ரயில் இலக்கம், பி.என்.ஆர் (PNR) அல்லது யு.டி.எஸ் (UTS) இலக்கம் மற்றும் புகார் அளிப்பவரின் தொலைபேசி இலக்கம் ஆகிய விவரங்களைப் பகிருமாறு கோரியுள்ளனர்.
இத்தகவல்கள் கிடைத்தால் குறித்த ரயிலை அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

































