Nov 27, 2026 - 02:09 PM

இந்தியாவின் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் திரித்தாலா பகுதியில் உள்ள பருத்தூர் அரசு மேல்நிலைப் பாடசாலையில், 9 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தை பார்த்து அதன் காட்சியைப் போல நடித்து, சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதற்காக அந்த மாணவன் இவ்வாறு செய்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி மதிய உணவு இடைவேளையின்போது, 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து சக மாணவர்களிடம் பெருமையாகக் காட்டியுள்ளான். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தில் வரும் துப்பாக்கிச் சூடு காட்சியைப் போலச் செய்து, அதனை ரீல்ஸ் வீடியோவாக எடுக்க அவன் முயற்சித்துள்ளான்.
அப்போது, எதிர்பாராத விதமாகத் துப்பாக்கி வெடித்து முதல் குண்டு வகுப்பறை சுவரில் பாய்ந்தது. இதனால் சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதன்பிறகு சுமார் 10 நிமிடங்கள் கழித்து அந்த மாணவன் மீண்டும் தனது பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து, சினிமா பாணியில் நடித்துக் காட்ட முயன்றுள்ளான். இந்த முறை துப்பாக்கியிலிருந்து சீறிப்பாய்ந்த குண்டு, சுமார் ஒன்றரை அடி தூரத்தில் நின்றிருந்த சக மாணவனின் தோள்பட்டைக்கும் அக்குளுக்கும் இடைப்பட்ட பகுதியில் பாய்ந்தது.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் இரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவனை ஆசிரியர்களும், பாடசாலை நிர்வாகத்தினரும் மீட்டு, உடனடியாக கோட்டக்கல் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். முதலில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவனுக்கு, வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்து உடலிலிருந்து துப்பாக்கிக் குண்டை அகற்றினர்.
தற்போது மாணவனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து வைத்தியர்களின் கண்காணிப்பில் உள்ளான்.
இந்தச் சம்பவம் குறித்து திரித்தாலா பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவன் கொண்டு வந்தது பழைய நாட்டுத் துப்பாக்கி (0.22 ரக ரிவால்வர்) என்பது தெரியவந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன அந்த மாணவனின் தாத்தா, காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக இந்தத் துப்பாக்கியை வைத்திருந்துள்ளார். வீட்டில் உள்ள அலமாரியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த அந்தத் துப்பாக்கியை மாணவன் யாருக்கும் தெரியாமல் பாடசாலைக்கு எடுத்து வந்துள்ளான்.
இந்தத் துப்பாக்கியில் ஒரே நேரத்தில் 6 குண்டுகளை நிரப்ப முடியும். மாணவனிடமிருந்து துப்பாக்கியுடன் சேர்த்து 12 தோட்டாக்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தத் துப்பாக்கி வட இந்தியாவில் தயாரிக்கப்பட்டதும், அதிலிருந்த தோட்டாக்கள் பஞ்சாப் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டதும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கியின் முழுப் பின்னணியை அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்ப பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
சக மாணவர்கள் மற்றும் காயமடைந்த மாணவனிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றதில், சினிமா பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது கவனக்குறைவால் இந்த விபத்து நடந்துள்ளது உறுதியானது. இதையடுத்து, துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவனைப் பொலிஸார் புதன்கிழமை நள்ளிரவு பாலக்காடு சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தினர். வாரியத்தின் உத்தரவின் பேரில், வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை கோழிக்கோடு வெள்ளிமாடுகுன்னு பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் அந்த மாணவன் தங்க வைக்கப்பட்டுள்ளான்.
இதற்கிடையில், உரிய உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக, அந்த மாணவனின் தாய் ஹப்சத் மீது திரித்தாலா பொலிஸார் ஆயுதத் தடைச் சட்டத்தின் (Arms Act, 1959) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொதுக் கல்வித்துறை இயக்குநருக்கு மாநிலக் கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சினிமா மற்றும் சமூக வலைதள மோகத்தால் பாடசாலை மாணவன் ஒருவர் வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் வந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

































