Nov 27, 2026 - 03:19 PM

DFCC வங்கி மற்றும் Mels Automobiles (Pvt) Ltd ஆகியவற்றுக்கு இடையேயான புதிய மூலோபாயக் கூட்டாண்மையின் மூலம், BMW வாகனத்தை சொந்தமாக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், இனி DFCC வங்கியின் நெகிழ்வான குத்தகைத் திட்டங்களையும், அதனுடன் இணைந்த பிரத்தியேக சேவை மற்றும் உத்தரவாதச் சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இரு நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளின் பங்கேற்புடன், 5 நவம்பர் 2026 அன்று கையெழுத்திடப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்தக் கூட்டாண்மை உத்தியோகபூர்வமாக்கப்பட்டது. இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட BMW முகவராண்மையை ஏற்றுக்கொண்ட பிறகு, Mels Automobiles நிறுவனத்தின் முதல் வங்கிக் கூட்டாண்மையாக இது அமைவதுடன், DFCC வங்கி அதன் அங்குரார்ப்பண வங்கிக் கூட்டாளராக மாறியுள்ளது.
இந்த ஒத்துழைப்பு, DFCC வங்கியின் நிதி நிபுணத்துவத்தையும், Mels Automobiles நிறுவனத்தின் உயர்தர வாகன மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைத் திறன்களையும் ஒன்றிணைத்து, வாகனத் தெரிவு மற்றும் நிதி வசதி முதல் பராமரிப்பு மற்றும் நீண்ட கால உரிமை வரை ஒரு ஒருங்கிணைந்த அனுபவத்தை உருவாக்குகிறது.
இந்தக் கூட்டாண்மை மூலம், தகுதியுள்ள வாடிக்கையாளர்கள், கடன் மதிப்பீடு மற்றும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஏழு ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் காலத்துடன், ஒப்பீட்டளவில் சிறந்த வட்டி வீதங்களில் DFCC குத்தகை வசதிகளைப் பெறலாம்.
DFCC வங்கி மூலம் நிதி வசதி பெறும் வாடிக்கையாளர்கள், பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, Mels Automobiles நிறுவனத்திடமிருந்து மூன்று இலவச சேவைகளையும், மொத்த உத்தரவாதக் காலத்தை நீட்டிக்கும் கூடுதல் இரண்டு வருட உத்தரவாதத்தையும் பெறுவார்கள்.
Mels Automobiles நிறுவனத்தின் மூலம் BMW வாகனத்தை வாங்க விரும்பும் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த நிதி வசதித் திட்டம் கிடைக்கிறது.
இந்தக் கூட்டணியை அறிமுகப்படுத்தும் விதமாக, DFCC வங்கி, DFCC Pinnacle வாடிக்கையாளர்களை புதிய BMW 7 Series தயாரிப்பின் ஒரு பிரத்தியேக தனிப்பட்ட முன்னோட்டத்திற்கு அழைத்தது. இந்த நிகழ்வு, விருந்தினர்களுக்கு இந்த சொகுசு வாகனத்தை நேரடியான சூழலில் அனுபவிப்பதற்கும், இந்தக் கூட்டாண்மை மூலம் கிடைக்கும் நிதி வசதி மற்றும் உரிமையாண்மையின் பலன்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது.
DFCC வங்கியின் பணிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திமால் பெரேரா கூறுகையில்: “பல வாடிக்கையாளர்களுக்கு, BMW கார் ஒன்றைச் சொந்தமாக்கிக் கொள்வது என்பது பல ஆண்டுகால அபிலாஷைகள், முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட சாதனைகளின் அடையாளமாகும். இந்த இலக்கை அடைவதற்கான நிதிப் பயணத்தை, கூடுதல் கவனத்துடனும், நெகிழ்வுத்தன்மையுடனும், நம்பிக்கையூட்டும் வகையிலும் ஏற்படுத்தித் தருவதே எங்களது பணியாகும். DFCC வங்கியின் நிதிசார் நிபுணத்துவத்தையும், Mels Automobiles வழங்கும் உயர்தர வாகன அனுபவத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம், இரு நிறுவனங்களிடமிருந்தும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தரம் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலான ஒரு வாகன உரிமையாளர் அனுபவத்தை நாங்கள் உருவாக்குகிறோம்.”
Mels Automobiles (Pvt) Ltd நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுஷ்க பொலொனோவிட்ட கூறுகையில்: “நீங்கள் ஒரு BMW காரைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த வாகனத்திற்குப் பின்னால் இருக்கும் அணியையும் நிறுவனத்தையுமே தேர்ந்தெடுக்கிறீர்கள். Melstacorp குழுமத்தின் ஒரு அங்கமாக, Mels Automobiles ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அந்த ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. DFCC வங்கியுடனான எங்களது இந்த முதற்கட்ட வங்கிப் பங்களிப்பு, வாகனத்தை வாங்கும் பயணத்திலிருந்தே அந்த ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது. நெகிழ்வான நிதி வசதிகள், உண்மையான வாகனங்கள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் ஆகிய அனைத்தும் இணைந்து, வாடிக்கையாளர்கள் தங்கள் காரைப் பெற்றுச் சென்ற பிறகும் அவர்களைத் தொடர்ந்து கவனித்துக்கொள்வதற்கான ஒரு வாக்குறுதியாக அமைகின்றன. இலங்கையில் BMW வாகனத்தின் புதிய அத்தியாயத்தில் இது ஒரு தொடக்கமாகும். எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து இந்த பயணத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.”
Melstacorp PLC நிறுவனத்தின் பூரண உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனமான Mels Automobiles, இலங்கையில் BMW வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர் மற்றும் விற்பனையாளர் ஆகும். அதன் செயல்பாடுகள், புதிய BMW வாகனங்களின் இறக்குமதி, விற்பனை மற்றும் விநியோகம், அசல் BMW உதிரிபாகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை உள்ளடக்கியது.
DFCC வங்கியைப் பொறுத்தவரை, இந்த கூட்டாண்மை, பொருத்தமான நிதி விருப்பங்களை நம்பகமான நிபுணத்துவ கூட்டாளர்களுடன் இணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களின் முக்கிய நிதி முடிவுகளை எளிதாக்குவதில் அதன் பரந்த கவனத்தை பிரதிபலிக்கிறது. இது அன்றாட வங்கித் தேவைகள் முதல் பெரிய தனிப்பட்ட மற்றும் வாழ்க்கை முறை முதலீடுகள் வரை, வாடிக்கையாளர்களின் நிதி முன்னேற்றத்தின் வெவ்வேறு நிலைகளில் அவர்களுக்கு சேவை செய்யும் வங்கியின் திறனையும் பலப்படுத்துகிறது.
நிதி, அங்கீகரிக்கப்பட்ட விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு மற்றும் பிரத்தியேக உரிமைப் பலன்களை ஒன்றிணைப்பதன் மூலம், DFCC வங்கியும் Mels Automobiles நிறுவனமும் BMW உரிமையைப் பெறுவதற்கான தங்குதடையற்ற மற்றும் கவனமான வழியை உருவாக்குகின்றன.
தகுதியான வாகனங்கள், நிதி விருப்பங்கள், பலன்கள் மற்றும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு வாடிக்கையாளர்கள் DFCC வங்கி அல்லது Mels Automobiles நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
1955ல் நிறுவப்பட்டு, 1956 முதல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள DFCC வங்கி பிஎல்சி, இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குமுறைக்குட்படுத்தப்பட்டு, Fitch Ratings நிறுவனத்தால் A (lka) எனத் கடன் தரமதிப்பீடு செய்யப்பட்டுள்ள இந்த வங்கி, தனிநபர், நிறுவனம் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வங்கிச் சேவைகளின் விரிவான தொகுப்பை, திறைசேரி, முதலீடு மற்றும் வர்த்தக நிதித் தீர்வுகளுடன் வழங்குகிறது.
வாடிக்கையாளர் மையப்படுத்தல் மற்றும் நிலைபேற்றியல் சார்ந்த புத்தாக்கத்தை மையமாகக் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 133 கிளைகளின் வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பு வழியாக 6,000-க்கும் மேற்பட்ட ஏடிஎம்களுக்கான அணுகல் உள்ளிட்டவற்றின் மூலம் தங்குதடையற்ற மற்றும் பாதுகாப்பான வங்கி அனுபவங்களை DFCC வங்கி வழங்குகிறது.
நிலைபேற்றியல் சார்ந்த நிதி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட முன்னோடியான DFCC வங்கி, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கும் நீண்டகால பொருளாதார மீள்திறனை வளர்ப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.
Melstacorp PLC நிறுவனம் தொடர்பான விபரங்கள்
Melstacorp PLC என்பது இலங்கையின் முன்னணி பன்முகத் துறைகளைக் கொண்ட நிறுவனக் குழுமங்களில் ஒன்றாகும். இது வாகனத் துறை, பெருந்தோட்டத் துறை, ஓய்வு மற்றும் பொழுதுபோக்குத் துறை, உற்பத்தித் துறை மற்றும் வர்த்தகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனக் குழுமம், அதன் நிதி நிலைத்தன்மை, ஒழுங்குமுறை சார்ந்த நிர்வாகம் மற்றும் பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பை உருவாக்கக்கூடிய, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிலையான வணிகங்களை உருவாக்கும் திறன் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது.
Mels Automobiles (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்
Mels Automobiles (Pvt) Ltd என்பது Melstacorp PLC நிறுவனத்தின் வாகனப் பிரிவாகும். இது, தொழில்முறை முகாமைத்துவம், செயல்பாட்டுத் திறன் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் ஆகியவற்றின் மூலம், இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த வாகன வர்த்தகநாமங்களை மேம்படுத்தவும் நிர்வகிக்கவும் நிறுவப்பட்டது.

































