Nov 27, 2026 - 06:37 PM

இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜதந்திரத் தூதரகங்களின் பிரதானிகள் மற்றும் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்றது.
கொழும்பிலுள்ள 19 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரத் தூதரகங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் (UNRCO) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
இதற்கு மேலதிகமாக, புதுடெல்லியிலிருந்து இலங்கைக்காக அங்கீகாரம் பெற்றுள்ள ஆறு நாடுகளின் இராஜதந்திரத் தூதரகப் பிரதிநிதிகளும் நிகழ்நிலை (Online) முறைமையின் ஊடாக இக்கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
இக்குழுவினரில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்திற்கு ஏற்கனவே ஆதரவளித்து வரும் தரப்பினரும், எதிர்காலத்தில் ஆதரவளிக்க எதிர்பார்த்துள்ள தரப்பினரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றம், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இலங்கையின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்குச் சர்வதேச பங்காளித்துவத்தைத் தொடர்ந்தும் பேணுவதன் முக்கியத்துவத்தை அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
அத்துடன், 2027 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இவ்வேலைத்திட்டத்திற்காக 950 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களில் சுமார் 40 சதவீதமானோர் பெண்கள் என்பதுடன், வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு அவர்கள் வழங்கும் முக்கிய பங்களிப்பும் இதன்போது பாராட்டப்பட்டது.
இலங்கை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய இராஜதந்திரப் பிரதிநிதிகள், எதிர்காலத்திலும் தமது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
கண்ணிவெடி அகற்றும் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய நிதி திரட்டும் வழிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதுவரை இவ்வேலைத்திட்டத்திற்கு ஆதரவளித்த நன்கொடை நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், கண்ணிவெடிகளற்ற இலங்கையை உருவாக்கும் இலக்கை அடைவதற்கு இணைந்து கொள்ளுமாறு புதிய பங்காளிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர், இலங்கை இராணுவத் தளபதி, வெளிவிவகார அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், தேசிய கண்ணிவெடி அகற்றும் நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கைப் பொலிஸாரின் சிரேஷ்ட பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதேபோன்று, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள MAG, The HALO Trust, SHARP மற்றும் DASH ஆகிய நான்கு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

































