Nov 27, 2026 - 08:27 PM

கிழக்கு முனையத்தின் (East Terminal) தானியங்கி முனையச் செயற்பாட்டு நடவடிக்கைகளை விரைவாகச் செயற்படுத்தி, அதன் செயற்பாடுகளை 50 சதவீத கொள்ளளவில் முன்னெடுக்கவுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
கிழக்கு முனையத்தின் தானியங்கி முனையச் செயற்பாடுகளைப் பார்வையிடுவதற்காகவும், அதன் செயற்பாட்டு முறைமை குறித்து ஆராய்வதற்காகவும் இன்று (27) பிற்பகல் அங்கு சென்றிருந்த போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
"துறைமுக அதிகாரசபை என்ற ரீதியில் நாங்கள் ஆரம்பித்த பிரதான கருத்திட்டமான கிழக்கு முனையம் தற்போது ஒரு விசேட மைல்கல்லை எட்டியுள்ளது. கிழக்கு முனையம் பிரதான இரு பகுதிகளைக் கொண்டுள்ளது என்பது எமக்குத் தெரியும். ஒன்று கப்பல்கள் வந்து நிற்கும் 'கீவோல்' (Quay wall) பகுதி மற்றும் அங்குள்ள 'கென்ட்ரி கிரேன்' (Gantry Crane) தொகுதி. அதனை நாங்கள் சில மாதங்களுக்கு முன்னரே நிறைவு செய்திருந்தாலும், இந்த முனையம் (Yard) தொடர்பில், குறிப்பாக அரை தானியங்கி முனையத்தை நிறைவு செய்வதில் கடந்த காலங்களில் பல சிக்கல்களை எதிர்நோக்கினோம். எனினும், துறைமுக அதிகாரசபை, அதன் அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் இணைந்து அந்த சவாலை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகக் கருதுகிறேன். எமக்குப் பின்னால் நீங்கள் காணக்கூடியவாறு, இந்த முனையத்திற்குள் தானியங்கி முறையில் இயங்கும் 'ஏ.ஆர்.எம்.ஜி' (Automated Rail Mounted Gantry Crane - ARMG) எனப்படும் 'கென்ட்ரி கிரேன்' தொகுதியை இன்று இயக்கி, செயற்பாட்டிற்குப் பயன்படுத்தியுள்ளோம். இது ஓர் அரசாங்கமாகவும், துறைமுக அதிகாரசபையாகவும், நாடாகவும் நாங்கள் பெற்றுக்கொண்ட மிகப் பெரிய வெற்றியாகும். இன்று ஒரு மருங்கை (Lane) நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எஞ்சிய பத்து மருங்கையும் இம்மாதத்திற்குள் ஆரம்பிப்போம். அத்துடன், இந்த ஆரம்பத்தின் போது நாங்கள் எதிர்பார்த்த செயல்திறனை, அதாவது மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 வரையான கொள்கலன்களைக் கையாளும் நிலையை எட்ட முடிந்தமை குறித்து எமது துறைமுக அதிகாரசபையும் அரசாங்கமும் மகிழ்ச்சியடைகின்றன. குறிப்பாகக் கப்பல் போக்குவரத்துத் துறையில் உள்ள அனைவரும் பெருமூச்சு விடக்கூடிய நிலை உருவாகியுள்ளது; இந்த முனையம் பல்வேறு காரணங்களால் அவ்வப்போது இழுபறிக்குள்ளாகியிருந்தது. தற்போது மிகச் சிறந்த பாதைக்கு வந்துள்ளது; இம்மாதத்திற்குள் 50 சதவீத கொள்ளளவில் கிழக்கு முனையத்தை இயக்க முடியும்." என்றார்.
இந்தக் கிழக்கு முனையத்தில் தற்போது உலகின் மிகப் பெரிய கப்பல்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பதுடன், இறக்குமதிக் கொள்கலன்கள் மற்றும் ஏனைய முனையங்கள் ஊடாக மீள் ஏற்றுமதி செய்யப்படும் கொள்கலன்களையும் கையாளும் வசதி உள்ளது.
கிழக்கு முனையத்தின் தானியங்கி முற்றத்தில் சுமார் 100 ஊழியர்களைக் கொண்டு இதன் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென்பதுடன், இது சர்வதேசப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாகச் செயற்படுத்தப்படுகிறது.

































