Nov 27, 2026 - 09:32 PM

2011 ஆம் ஆண்டில் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களும் காணாமல் போனமை தொடர்பில் அவர்களது உறவினர்களால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) வழக்கிற்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (27) இரண்டாவது நாளாகவும் சாட்சியமளித்தார்.
நிகழ்நிலை (Online) தொழில்நுட்பத்தின் ஊடாக அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்தவாறு இவ்வழக்கில் இணைந்து கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில், இன்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆதரவாளர்கள் குழுவொன்று எதிர்ப்புப் பதாதைகளை ஏந்தியவாறு மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணி நுவன் போபகே, முன்னாள் ஜனாதிபதியிடம் வினவுகையில், அக்காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த உங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்களான குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பொலிஸாரும் ஆட்கள் காணாமல் போனமை மற்றும் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்கள் அல்லவா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,
"பாதுகாப்புச் செயலாளர் என்ற ரீதியில் எனது பொறுப்பு தேசிய பாதுகாப்பு தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதாகும். பல்வேறு சம்பவங்கள் குறித்து ஆராய்வது அந்தந்தப் பொலிஸ் நிலைய அதிகாரிகளின் பொறுப்பே தவிர, எனது பொறுப்பல்ல. இராணுவத் தளபதிக்கும் ஜனாதிபதிக்கும் ஆலோசனை வழங்குவதும், தேவையான ஆளணியை வழங்குவதுமே எனது பொறுப்பாக இருந்தது" எனத் தெரிவித்தார்.
இதன்போது, ஊடகவியலாளர் கீத் நொயார் காணாமல் போனமை தொடர்பான விசாரணை அறிக்கையொன்றைச் சட்டத்தரணி நுவன் போபகே முன்னாள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
"இந்த அறிக்கையின்படி, கீத் நொயார் கடத்தப்பட்டதன் பின்னர் நீங்கள் அன்றைய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவுடனும், புலனாய்வுப் பிரிவுப் பிரதானி மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரணவுடனும் பேசியுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது" எனச் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலளித்த கோட்டாபய ராஜபக்ஷ, "இந்த அறிக்கை குறித்து எனக்குத் தெளிவில்லை. ஆனால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் எனக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால், அது குறித்துப் புலனாய்வுப் பிரிவுப் பிரதானிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவிப்பது சாதாரண வழமையாகும்" எனக் குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்குக் கேள்வி எழுப்பிய சட்டத்தரணி, "அது சாதாரண தலையீடு அல்ல. கடத்தல் குறித்து அறிந்திருந்த போதிலும், உங்களுக்குக் கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் கீத் நொயாரை விடுவிக்குமாறு நீங்கள் உத்தரவிட்டீர்கள் என நான் கூறினால், அதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?" என வினவினார்.
"அது முற்றிலும் தவறானது. நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை" என முன்னாள் ஜனாதிபதி பதிலளித்தார்.
இதன்போது, ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணி, முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணியின் கேள்விகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், கேள்விகள் குறித்த விசாரணைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.
தொடர்ந்து முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணி நுவன் போபகே, "பொத்தல ஜயந்த எனப்படும் ஊடகவியலாளரை உங்களுக்குத் தெரியுமா?" என வினவியதற்கு, "எனக்கு அவரைத் தெரியாது" என கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்தார்.
மீண்டும் கேள்வி எழுப்பிய சட்டத்தரணி, "2009 ஜூன் 01 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் பொத்தல ஜயந்த வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டதாக உங்களுக்கு அறிக்கையிடப்பட்டதா?" எனக் கேட்டார்.
"எனக்கு அவ்வாறான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அவ்வாறொன்று நடந்திருந்தால் உரிய அதிகாரிகள் அறிவித்திருப்பார்கள்" என முன்னாள் ஜனாதிபதி பதிலளித்தார்.
இதன்போது, கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணி, முறைப்பாட்டாளர் தரப்பு சர்ச்சைக்குரிய விசாரணையைத் தாண்டி கேள்விகளை எழுப்புவதாகக் கூறி மீண்டும் ஆட்சேபனை தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த சட்டத்தரணி நுவன் போபகே, "கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற காணாமல் போனமை குறித்து அவருக்குத் தனிப்பட்ட ரீதியில் அறிவு இருந்தது என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதால், லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான இவ்வழக்கிற்கு ஏனைய காணாமல் ஆக்கப்படல்கள் குறித்துக் கேள்வி எழுப்புவதும் முக்கியமானது" எனக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, சாட்சியிடம் தொடர்ந்தும் கேள்விகளை எழுப்புவதற்கு முறைப்பாட்டாளர் தரப்பிற்கு யாழ்ப்பாணம் நீதவான் எஸ். லெனின் குமார் அனுமதி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, 2015 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி 'சத்ஹண்ட' (Sathhanda) எனப்படும் பத்திரிகைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியிருந்த நேர்காணல் தொடர்பான ஆவணமொன்றைச் சட்டத்தரணி நுவன் போபகே பரிசோதிப்பதற்காக அவரிடம் வழங்கினார்.
அதனைப் பரிசோதித்த முன்னாள் ஜனாதிபதி, குறித்த நேர்காணல் தானே வழங்கிய நேர்காணல் என்பதை இச்சந்தர்ப்பத்தில் உறுதிப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார்.
இதன்போது, குறித்த நேர்காணல் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவொன்றைத் திறந்த நீதிமன்றில் ஒலிபரப்புவதற்குச் சட்டத்தரணி நுவன் போபகே நடவடிக்கை எடுத்தார்.
திறந்த நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஒலிப்பதிவின் சாராம்சம் வருமாறு:
"ஜே.வி.பி-க்கு (JVP) இவரைக் கைது செய்ய வேண்டிய கடுமையான தேவை இருந்ததுதானே. அநுர குமாரக்களுக்கு இந்த முன்னிலை சோசலிசக் கட்சியினர் பெரிய அச்சுறுத்தலாக இருந்தார்கள்தானே. இப்போது எனக்கும் அநுர குமார அடிக்கடி சொல்கிறார், 'அதோ அங்கே இருக்கிறார், இதோ இங்கே இருக்கிறார்' என்கிறார், புகைப்படங்களை அனுப்புகிறார்; அநுர குமாரவும் பெரிய முயற்சி எடுத்தார். ஏனென்றால் அவர் என்னுடன் பேசியிருக்கிறார் தானே. பொய் சொல்லத் தேவையில்லை தானே. குணரத்னத்தைக் கைது செய்து நாடு கடத்த வேண்டும் என அநுர குமார விரும்பினார். அது தொடர்பில் அவர் என்னுடன் பலமுறை பேசியுள்ளார். எங்களுக்கு அவரது உருவ அமைப்பு கூடத் தெரியாது. எங்களுக்குக் கிடைத்த புகைப்படங்களைச் சில நேரங்களில் அவரிடம் அனுப்பி, இவை சரியா எனப் பார்க்கச் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது."
அந்த ஒலிப்பதிவை ஒலிபரப்பியதன் பின்னர் சட்டத்தரணி நுவன் போபகே முன்னாள் ஜனாதிபதியிடம் வினவுகையில், "அந்த ஒலிப்பதிவில், குமார் குணரத்னத்தைக் கைது செய்வதற்கு மக்கள் விடுதலை முன்னணியிடமிருந்து தகவல்கள் கிடைத்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் அல்லவா?" எனக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, "அது அந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு வழங்கப்பட்ட பதில். இந்த நேரத்தில் என்னால் விரிவாகக் கூற முடியாது" எனத் தெரிவித்தார்.
இதன்போது மீண்டும் கேள்வி எழுப்பிய சட்டத்தரணி, "குமார் குணரத்னம் கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில், அவுஸ்திரேலியத் தூதரகத்தின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?" என வினவினார்.
"அவ்வாறானதொரு சம்பவம் எனக்கு நினைவில்லை. இது பத்திரிகையொன்றில் வெளியான விடயம். இது எனது சொந்த நேர்காணல் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வழியில்லை" என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக அடுத்த ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

































