Nov 27, 2026 - 11:20 PM

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவரும், அமைச்சருமான கலாநிதி ஹினிதும சுனில் செனெவியின் தலைமையில் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடியது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சார்பில் கொழும்புக்கு அண்மையில் அமைந்துள்ள 27 ஏக்கர் காணியைப் பெற்றுக்கொண்டு, திரைப்படம், கலை மற்றும் கலாசார நடவடிக்கைகள், அத்துடன் தியானம் மற்றும் பௌத்த தத்துவக் கற்கை நிறுவனங்களுக்காக “கலை மற்றும் கலாசார கிராமம்” ஒன்றை நிறுவுவதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.
தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது அகழ்வுப் பணிகளை முன்னெடுக்காமல், GPR (Ground Penetrating Radar) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிலத்திற்குக் கீழே காணப்படும் தொல்பொருட்களைப் பரிசோதிக்கும் நவீன அணுகுமுறை பின்பற்றப்படுவதாக குழுவின் தவிசாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதன்போது தெளிவுபடுத்தினர்.
தர்மப் பாடசாலை இறுதிப் பரீட்சையும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையும் ஒரே காலப்பகுதியில் இடம்பெறுவதால் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக, கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த பரீட்சை நாட்காட்டியொன்றைத் தயாரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மாகாண மற்றும் வலய மட்டங்களில் பரீட்சைத் திகதிகள் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
சேதமடைந்துள்ள குருநாகல் இராஜசபை மண்டபத்தைப் பாதுகாப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இந்த இடம் தொடர்பில் நிலவும் உரிமை மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தொல்பொருள் திணைக்களம், மத்திய கலாசார நிதியம், குருநாகல் மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன இணைந்து கூட்டுக் கலந்துரையாடலொன்றை நடத்தி, விரைவில் இறுதித் தீர்வொன்றை எட்டுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
ரமழான் காலப்பகுதியில் வெளிநாடுகளிலிருந்து நன்கொடையாகக் கிடைக்கும் பேரீச்சம்பழங்களை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,700 பள்ளிவாசல்களுக்கும் நியாயமான முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதற்காக முறையான ஆவணப்படுத்தல் நடைமுறையொன்று செயற்படுத்தப்படும் என்றும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், புத்தசாசன, சமய மற்றும் கலாசாரத் துறைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவில் முன்வைக்கப்பட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான கமகெதர திஸாநாயக்க மற்றும் முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

































