Nov 27, 2026 - 11:55 PM

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்கு 24,024.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது அண்மைக்கால வரலாற்றில் கடற்றொழில் துறைக்காக ஒதுக்கப்பட்ட அதிகூடிய நிதியாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் கீழ், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தொடர்பான விவாதம் இன்று (27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை கடற்றொழில் அமைச்சுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான மேலதிக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 7,511 மில்லியன் ரூபாயும், 2024ஆம் ஆண்டு 10,597 மில்லியன் ரூபாயும், 2025ஆம் ஆண்டு 10,668 மில்லியன் ரூபாயும், 2026ஆம் ஆண்டு 16,635 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2027ஆம் ஆண்டுக்காக 24,024.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மக்களின் போஷாக்குத் தேவையைப் பூர்த்தி செய்வதிலும், குறிப்பாக புரதச்சத்து தேவையை உறுதிப்படுத்துவதிலும் கடற்றொழில் துறை முக்கிய பங்காற்றுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித்துறைகளை ஒருங்கிணைத்து அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, யான் ஓயா நீர்த்தேக்கத்தில் கூண்டு முறையிலான மீன் வளர்ப்புத் திட்டம் முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. இதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த ஆண்டில் நாட்டின் உள்நாட்டு நீர்த்தேக்கங்களில் 175 மீன் வளர்ப்புக் கூண்டுகளை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரித்து மக்களுக்கான புரத உணவு விநியோகத்தை மேம்படுத்த முடியும்.
அதேவேளை, நாட்டின் மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அதிகளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 13,600 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் கந்தர மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிறைவுசெய்யப்பட்டு, சர்வதேச தரத்திலான முழுமையான மீன்பிடித் துறைமுகமாக மக்கள் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்படும்.
மேலும், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், காலி, அம்பலாங்கொடை, தெவுந்தர, மிரிஸ்ஸ மற்றும் கலமெட்டிய உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களையும் நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் முறையான சாத்தியக்கூறு ஆய்வுகள் இன்றி சில மீன்பிடித் துறைமுகங்கள் நிர்மாணிக்கப்பட்டமையால் கிரிந்த, ஹிக்கடுவை, அம்பலாங்கொடை மற்றும் பாணந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மணல் குவியும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக எதிர்காலத்தில் முறையான சாத்தியக்கூறு ஆய்வுகளின் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
மீனவர்களின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 25,000 மீனவர்கள் இத்திட்டத்தின் கீழ் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர். தற்போது மீனவர் ஒருவர் உயிரிழக்கும் சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை, எதிர்வரும் ஆண்டிலிருந்து இரண்டு மில்லியன் ரூபாயாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், மீனவர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஓய்வூதியத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பிரதிநிதிகளான தாங்கள் தங்களுக்கான ஓய்வூதியத்தை இரத்துச் செய்துள்ள நிலையில், மீனவர்களுக்கு ஓய்வூதிய உரிமையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் கடற்படையினருடனும் பாதுகாப்புத் தரப்பினருடனும் இணைந்து கண்காணிப்பு மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளினதும் அதிகாரிகள் பங்கேற்கும் இருதரப்புப் பேச்சுவார்த்தை 2027 ஜனவரி 22ஆம் திகதி புதுடில்லியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே, கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைத்து அவற்றின் செயற்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிகள், வர்த்தகக் கடன்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்ட நிலுவைகளைத் தீர்ப்பதற்கும் அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.
மேலும், தரமான மீன் விற்பனை நிலையங்களை உருவாக்குவதுடன், பேலியகொடை மத்திய மீன் சந்தை மற்றும் மீன் கையாளுகை நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய உயர் தரத்திலான மையமாக மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடற்றொழில் துறையின் உற்பத்தித் திறனை அதிகரித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு இத்துறையின் பங்களிப்பை உயர்த்துவதே 2027ஆம் ஆண்டுக்கான அமைச்சின் முக்கிய இலக்காகும் என்றும் பிரதி அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

































