Nov 28, 2026 - 03:26 PM

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 43 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்கள் தற்போது தங்கியிருக்கும் நாடுகள் குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (28) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 17 பேர் டுபாயிலும், 14 பேர் இந்தியாவிலும், மூவர் ஜப்பானிலும் தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எஞ்சிய குற்றவாளிகள் மேலும் ஒன்பது நாடுகளில் மறைந்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இவர்கள் அனைவரையும் விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
மேலும், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்களுக்கு எதிராக 233 சர்வதேச சிவப்பு அறிவித்தல்களும் (Red Notices), 92 நீல அறிவித்தல்களும் (Blue Notices) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வெளிநாடுகளில் பதுங்கியிருந்த 72 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்கள் இதுவரை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

































