Nov 28, 2026 - 03:49 PM

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பஸ் மீது மலையிலிருந்து உருண்டு விழுந்த பாரிய கற்பாறை மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (28) பிற்பகல் சுமார் 2.30 அளவில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை - களுகல பொலிஸ் காவலரணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பஸ் பயணித்துக்கொண்டிருந்தபோது, மலை உச்சியிலிருந்து உருண்டு வந்த கற்பாறை பஸ்ஸின் மீது விழுந்துள்ளது.
இதில் பஸ்ஸின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பலத்த காயமடைந்ததுடன், அவரை பொலிஸாரும் பயணிகளும் இணைந்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் அக்கரப்பத்தனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கற்பாறை மோதியதில் பஸ்ஸுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

































