Nov 28, 2026 - 05:38 PM

இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் இன்று (28) மாலை தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்றநீதிபதிகளான எஸ். வைத்தியநாதன் மற்றும் எஸ். பார்த்திபன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையிலும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருநாளின் போது, உச்சிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள தீப மண்டபத்திலேயே வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும்.
இந்நிலையில், கார்த்திகை தீபத் திருநாளில் ஒரு நாள் மாத்திரம் மலை உச்சியிலுள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த 20ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
எனினும், உரிய அனுமதி வழங்கப்படாததால் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
இதனையடுத்துத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு திட்டமிட்டு மீறியுள்ளதாகக் கடும் கண்டனம் தெரிவித்தது.
அத்துடன், திருப்பரங்குன்றம் ஆலய அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்த உச்ச நீதிமன்றம், ஆலய நிர்வாகத்தை ஓய்வுபெற்ற நீதிபதிகளான வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோரிடம் ஒப்படைத்து, இன்று மலைத்தூணில் தீபம் ஏற்றுமாறு உத்தரவிட்டது.
இதற்கமைய, ஓய்வுபெற்ற நீதிபதிகள், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) உயரதிகாரி மற்றும் ஆலய அர்ச்சகர்கள் உள்ளிட்ட 13 பேர் கொண்ட வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டு, இன்று மாலை 5 மணியளவில் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.
மலையில் அமைந்துள்ள பள்ளிவாசலை அண்டிய 50 மீற்றர் பகுதியைப் பாதுகாக்கும் வகையிலும், எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணமும் பெங்களூருவிலிருந்து வரவழைக்கப்பட்ட மேலதிக வீரர்கள் உட்படப் பெருமளவான மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மலை உச்சிக்குச் செல்ல 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மலை அடிவாரத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "முருகனுக்கு அரோகரா" என்ற பக்தி கோஷத்துடன் பட்டாசுகள் வெடித்துத் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

































