Nov 28, 2026 - 10:10 PM

பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்களின் காணி உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, கம்பனிகளுடனான குத்தகை ஒப்பந்தம் நீடிக்கப்பட வேண்டும் என்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாட்டை, அதன் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பில் இன்று நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஊடகச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சில தரப்பினர் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடுகளைத் திரிபுபடுத்தி கூறுவதை நிறுத்த வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
1992ஆம் ஆண்டு கம்பனிகளுடன் குத்தகை ஒப்பந்தத்தை ஆரம்பித்து வைத்த தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போது அந்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறியத் தீர்மானித்துள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முரண்பாடான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்த்து, தமது ஒரே நிலைப்பாடு எது என்பதை இ.தொ.கா தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
குத்தகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பெருந்தோட்டத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு, மக்களின் காணி உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே கூட்டணியின் ஒரே கொள்கை என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது நிலைப்பாடும் இதுவே எனச் செந்தில் தொண்டமான் இதன்போது தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பெருந்தோட்டங்களில் வாழும் திருமணமான ஒவ்வொரு குடும்பத்துக்கும், அவர்கள் தோட்டங்களில் பணிபுரிந்தாலும் இல்லாவிட்டாலும், 20 பேர்ச் வதிவிடக் காணி வழங்கப்பட வேண்டும் என மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், வாழ்வாதாரக் காணி தொடர்பில் தற்போதைய அரசாங்கம் தமது 'ஹட்டன் பிரகடனத்தில்' வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, தரிசு நிலங்களை மலையகத் தமிழ் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலையக சிவில் சமூகம் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இது குறித்துப் பேசவுள்ள போதிலும், வதிவிடக் காணி மற்றும் வாழ்வாதாரக் காணி விவகாரங்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அதன் அங்கத்துவக் கட்சிகளும் எப்போதும் உறுதியான ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளன என மனோ கணேசன் செந்தில் தொண்டமானிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

































