Nov 28, 2026 - 10:30 PM

பொலன்னறுவை - ஹிங்குரக்கொட பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், டீசல் சேமித்து வைக்கப்பட்டிருந்த தாங்கிக்குள் பெட்ரோல் தொகையொன்று தவறுதலாக மாற்றப்பட்டு இறக்கப்பட்டமையால், அங்கிருந்த எரிபொருள் முற்றாக வீணாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று (28) முற்பகல் அங்கு வருகை தந்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய, டீசல் தாங்கிக்குள் மாற்றப்பட்ட பெட்ரோல் தொகையை மீண்டும் அதே பவுசரில் ஏற்றி, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எடுத்துச் சென்று பரிசோதிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் நிலத்தடி டீசல் தாங்கிக்குள் இறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹிங்குரக்கொட கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹிங்குரக்கொட பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிர்வாக நடவடிக்கைகளைத் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரிகள் குழுவினரே முன்னெடுத்து வருகின்றனர்.
அவர்களின் செயற்திறனற்ற தன்மை மற்றும் உரிய முறையில் செயற்படாமையாலேயே இந்தப் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளராக ஹிங்குரக்கொட பிரதேச சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கடமையாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

































