Nov 29, 2026 - 11:09 AM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

2027ஆம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தில் 25,000 ரூபா கொடுப்பனவை நிபந்தனையின்றி உள்வாங்குமாறு கோரி, எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
போராட்டம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சங்கத்தினர் இதனைக் குறிப்பிட்டனர்.
அரசின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேற்தட்டு மனோநிலையிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய சில தொழிற்துறையினரைத் திருப்திப்படுத்தும் வகையில் சம்பள உயர்வுகளும் மேலதிக கொடுப்பனவுகளும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
அரச ஊழியர்களின் வாழ்வாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, 25,000 ரூபா கொடுப்பனவை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்குமாறு பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றன.
இலங்கை அரசியலமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) சாசனங்களால் உறுதிப்படுத்தப்பட்ட தொழில்சார் உரிமைகளுக்கு அமைவாகவே இப்போராட்டம் சட்டபூர்வமாக முன்னெடுக்கப்படுகிறது.
எனவே, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 30ஆம் திகதி சுகவீன விடுப்பைப் பயன்படுத்திப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.
இப்போராட்டம் எவருடைய அரசியல் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதற்காகவோ அல்லது அரசாங்கத்தை அரசியல் ரீதியாக நெருக்கடிக்குள்ளாக்குவதற்காகவோ முன்னெடுக்கப்படுவதல்ல. தமது நியாயமான தொழில்சார் மற்றும் வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
எனவே, இப்போராட்டத்தில் பங்கேற்கும் உத்தியோகத்தர்களுக்கு எந்தவொரு தரப்பினரோ அல்லது மேலதிகாரிகளோ அழுத்தங்களையோ நெருக்கடிகளையோ பிரயோகிக்க வேண்டாம் எனவும் ஊடக சந்திப்பில் அச்சங்கத்தால் வலியுறுத்தப்பட்டது.

































