Nov 29, 2026 - 01:53 PM

பல அரச நிறுவனங்களில் நாளை (30) முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் அடையாள ரீதியாக மாத்திரம் இணைந்து கொள்ளத் தாம் தீர்மானித்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாகக் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டும், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நுகர்வோருக்குத் தெளிவுபடுத்தும் பதாதைகளைக் காட்சிப்படுத்தியும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கோசல விதானஆராச்சி இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருள் விநியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (29) நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
பெறுமதி சேர் வரி காரணமாக விநியோகஸ்தர்களுக்குக் கிடைக்க வேண்டிய தள்ளுபடித் தொகையில் கணிசமான பகுதி இழக்கப்படுவதாகவும், இதனால் தமது வருமானம் 50 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலைமையால் எரிபொருள் விநியோக வியாபாரத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது கூடச் சிரமமாகியுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளும் வினைத்திறனற்ற மட்டத்தில் காணப்படுவதால் விநியோகஸ்தர்கள் மேலும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இப்பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்குக் வலுசக்தி அமைச்சர் எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி சந்தர்ப்பம் வழங்கியுள்ளமையால், அந்தச் சந்திப்பின் பின்னரே எதிர்காலத் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்க எதிர்பார்ப்பதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.
அதுவரை எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் எவ்விதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், வழமை போன்று எரிபொருள் முன்பதிவு மற்றும் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஊடகப் பேச்சாளர் கோசல விதானஆராச்சி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

































