Nov 29, 2026 - 05:14 PM
By யாழ். நிருபர் கஜிந்தன்
By யாழ். நிருபர் கஜிந்தன்

வட மாகாணப் பாடசாலைகள் மற்றும் பரீட்சைகள் திட்டமிட்டபடி நாளை (30) நடைபெறும் என வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.
நாளை (30) வட மாகாணத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் பரீட்சைகள் நடைபெறமாட்டாது என இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் குறித்து மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கக்கூடிய அதிகாரமுள்ள தரப்பினரிடமிருந்து எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
எனவே, வட மாகாணத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் நாளை (30) திட்டமிட்டபடி கல்விச் செயற்பாடுகளும், ஒழுங்கமைக்கப்பட்டவாறு பரீட்சைகளும் நடைபெறும்.
மேலும், இந்த ஆண்டுக்குரிய சகல கல்விச் செயற்பாடுகளும் உரிய காலத்தினுள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில், கல்வி அமைச்சின் செயலாளரால் கடந்த 2026.11.23 ஆம் திகதி வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாகவே சகல பாடசாலைகளும் தொடர்ந்து இயங்கும்.
இதற்கமைய, நாளை வழமைபோலப் பாடசாலைகளும் பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறுவதால், சகல அதிபர்களும் வலயக் கல்விப் பணிப்பாளர்களும் இதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

































