Nov 29, 2026 - 05:59 PM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

டித்வா' (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களும் நிரந்தர வீடுகளும் வழங்கப்படாததைக் கண்டித்து, மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (29) நுவரெலியா நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் பல பகுதிகளைக் கடுமையாகப் பாதித்த பேரழிவுகரமான 'டித்வா' புயல் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை முறையான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியே இப்போராட்டம் நடத்தப்பட்டது.
குறிப்பாக, நுவரெலியா உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளையும் நிரந்தர வீடுகளையும் விரைவாக அமைத்துத் தருமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதி மற்றும் நுவரெலியா - பதுளை பிரதான வீதி வழியாக நகரைச் சுற்றி வந்து, நுவரெலியா பிரதான அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக நிறைவடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
'டித்வா' புயலால் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட கனமழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவுகளால் வீடுகள், வீதிகள் மற்றும் பயிர் நிலங்களுக்குப் பெரும் அழிவுகள் ஏற்பட்ட போதிலும், இன்றுவரை தமக்கு எவ்விதத் தீர்வும் வழங்கப்படவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே, அக்கட்சியின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

































