Nov 29, 2026 - 06:15 PM

மாத்தறை, மிரிஸ்ஸ தல்அரம்ப கடற்கரைப் பகுதியில் நேற்று (28) கண்டெடுக்கப்பட்ட 17 உறைகளில் இருந்த 340 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 346 கிலோகிராம் மற்றும் 184 கிராம் நிறையுடைய 'ஐஸ்' போதைப்பொருள் தொகை என்பது, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவ உதவியுடன் இன்று (29) மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இலங்கை விமானப்படை மற்றும் அரச புலனாய்வுச் சேவை ஆகியன இணைந்து முன்னெடுத்த இந்த விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருள் தொகையின் மொத்த பெறுமதி சுமார் நான்கு பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையின் போது போதைப்பொருளைக் கொண்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் டிங்கி படகுடன் இரண்டு சந்தேகநபர்களும், போதைப்பொருளைக் கொண்டு செல்வதற்காக வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு வேன்களுடன் ஒரு பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தொகை, படகு, வேன்கள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட இந்தப் போதைப்பொருள் தொகையைப் பார்வையிடுவதற்காகப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வுபெற்ற) உள்ளிட்ட பாதுகாப்புத் துறைப் பிரதானிகள் குழுவினரும் இன்று இணைந்து கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர், நாடே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகளின் ஊடாக மாத்திரம் 120 பில்லியன் ரூபாவுக்கும் அதிக மொத்த வீதிப் பெறுமதியுடைய போதைப்பொருட்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினருடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு தரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், நாட்டிற்குள் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதற்கு எவ்வித இடமும் அளிக்கப்படமாட்டாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாடே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் இதுவரை கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான தரவுகளையும் அமைச்சர் இதன்போது முன்வைத்தார்.
கைது செய்யப்பட்ட மொத்த நபர்கள்: 331,130
பிரதான கடத்தல்காரர்கள்: 1,063
உதவி மற்றும் ஒத்தாசை வழங்கியவர்கள்: 5,749
ஹெரோயின் போதைப்பொருள்: 2,987 கிலோகிராம்
ஐஸ் போதைப்பொருள்: 3,760 கிலோகிராம்
கஞ்சா: 11,341 கிலோகிராம்
கொக்கெய்ன்: 303 கிலோகிராம்
குஷ் போதைப்பொருள்: சுமார் 300 கிலோகிராம்
இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்கப் பங்களிப்புச் செய்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி சார்பில் நன்றியைத் தெரிவித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர், போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக 1818 அல்லது 1997 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், போதைப்பொருள் அபாயம் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டுவதில் ஊடகங்கள் ஆற்றும் பங்களிப்பையும் அவர் இதன்போது பாராட்டினார்.

































