Nov 29, 2026 - 06:59 PM

கட்டார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் (Asia Cup Rising Stars) 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இலங்கை 'ஏ' அணியின் அபாரமான பந்துவீச்சினால் பாகிஸ்தான் 'ஏ' அணி 216 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 'ஏ' அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
மாஸ் சதாகத் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஆரம்ப வீரர் ஷமைல் ஹுசைன் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 40 ஓட்டங்களைப் (5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) பெற்று அணியை மீட்க முயற்சித்தார்.
மறுமுனையில் நிதானமாக ஆடிய ஷாசைப் கான் 91 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பெற்று அரைச்சதம் கடந்தார். இவருக்கு அணித்தலைவர் அப்துல் சமத் (33 ஓட்டங்கள்) நல்ல ஒத்துழைப்பு வழங்க, பாகிஸ்தான் அணி 32.4 ஓவர்களில் 144 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஓரளவு வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், அதன் பின்னர் இலங்கை 'ஏ' அணியின் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கைத் தம்வசப்படுத்தினர்.
குறிப்பாக ரவிந்து பெர்னாண்டோ 10 ஓவர்களில் வெறும் 26 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.
அவருக்குத் துணையாக கருகே சன்கீத் 3 விக்கெட்டுகளையும், வனுஜ சஹான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனால் 144 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி, அடுத்த 23 ஓட்டங்களுக்குள் மேலும் 4 விக்கெட்டுகளை (167/8) இழந்து தடுமாறியது.
இக்கட்டான நிலையில் களமிறங்கிய விக்கெட் காப்பாளர் ரோஹைல் நசீர் 43 பந்துகளில் 37 ஓட்டங்களையும், இறுதியில் சுபியான் முகீம் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களையும் சேர்க்க, பாகிஸ்தான் 'ஏ' அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதற்கமைய, ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிண்ணத்தைத் தட்டிச் செல்ல இலங்கை 'ஏ' அணிக்கு 50 ஓவர்களில் 217 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

































