Nov 29, 2026 - 10:55 PM

கட்டார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் (Asia Cup Rising Stars) 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் ஏ அணியை ஒரு விக்கெட்டால் வீழத்திய இலங்கை ஏ அணி கிண்ணத்தை வென்று சாதித்துள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 'ஏ' அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
மாஸ் சதாகத் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஆரம்ப வீரர் ஷமைல் ஹுசைன் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 40 ஓட்டங்களைப் (5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) பெற்று அணியை மீட்க முயற்சித்தார்.
மறுமுனையில் நிதானமாக ஆடிய ஷாசைப் கான் 91 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பெற்று அரைச்சதம் கடந்தார். இவருக்கு அணித்தலைவர் அப்துல் சமத் (33 ஓட்டங்கள்) நல்ல ஒத்துழைப்பு வழங்க, பாகிஸ்தான் அணி 32.4 ஓவர்களில் 144 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஓரளவு வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், அதன் பின்னர் இலங்கை 'ஏ' அணியின் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கைத் தம்வசப்படுத்தினர்.
குறிப்பாக ரவிந்து பெர்னாண்டோ 10 ஓவர்களில் வெறும் 26 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.
அவருக்குத் துணையாக கருகே சன்கீத் 3 விக்கெட்டுகளையும், வனுஜ சஹான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனால் 144 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி, அடுத்த 23 ஓட்டங்களுக்குள் மேலும் 4 விக்கெட்டுகளை (167/8) இழந்து தடுமாறியது.
இக்கட்டான நிலையில் களமிறங்கிய விக்கெட் காப்பாளர் ரோஹைல் நசீர் 43 பந்துகளில் 37 ஓட்டங்களையும், இறுதியில் சுபியான் முகீம் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களையும் சேர்க்க, பாகிஸ்தான் 'ஏ' அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இதற்கமைய, இலங்கை 'ஏ' அணிக்கு 50 ஓவர்களில் 217 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
217 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை 'ஏ' அணிக்கு ஆரம்ப வீரர் சினெத் ஜயவர்தன 13 பந்துகளில் 20 ஓட்டங்களுடன் அதிரடித் தொடக்கம் கொடுத்தார்.
லசித் குரூஸ்புள்ளே 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, 3ஆவது விக்கெட்டுக்காகக் கைகோர்த்த நிஷான் மதுஷ்க மற்றும் அணித்தலைவர் பவன் ரத்நாயக்க ஆகியோர் 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
பவன் ரத்நாயக்க 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில், மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய நிஷான் மதுஷ்க 87 ஓட்டங்களைப் பெற்ற போது ஆட்டமிழந்தார்.
83 பந்துகளில் 19 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் விஜயகாந்த் வியாஸ்காந்தும் 13 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து வௌியேறினார்.
இறுதி வரை இலங்கை அணி வெற்றிக்காக போராடிய நிலையில் 41.3 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

































