Jul 8, 2025 - 09:27 AM -
0
இந்தியாவின், தெலங்கானா மாநிலத்தில் 5 வயது சிறுமியை கழுத்தறுத்து, தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள கொருட்டு கிராமத்தை சேர்ந்த தம்பதி ராமு, நவீனா. இந்த தம்பதியின் 5 வயது மகள் ஹரிஷ்டா. இவர் கடந்த சனிக்கிழமை அன்று மாலையில் வீட்டின் அருகே நடைபெற்ற விளையாட்டு போட்டியை காண சென்றுள்ளார்.
விளையாட்டு போட்டி முடிந்து நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஊர் முழுவதும தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து இரவு 10 மணி அளவில் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே விரைந்து வந்த பொலிசார் வீடு வீடாக சல்லடை போட்டு தேடியுள்ளனர். அப்போது, அருகில் விஜய் என்பவரின் வீட்டின் குளியல் அறையில் இருந்து சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.
அதைக் கேட்டதும் பெற்றோர் உட்பட ஒட்டுமொத்த கிராமமே அதிர்ச்சியில் உறைந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் வீட்டின் உரிமையாளர் விஜயை தொடர்பு கொண்டனர்.
அவர் வாரங்கலில் இருப்பதாகவும், தனது வீட்டிற்கு எப்போதாவது தான் வந்து செல்வதாகவும் கூறியுள்ளார்.
இதன் பின்னர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமியின் சித்தப்பா மனைவி மமதா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
உடனே, மமதாவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் அளித்த வாக்குமூலம் பொலிசாரையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஒன்லைன் சூதாட்டம், பிட்காயின் ஆகியவற்றில் முதலீடு செய்ததில் 25 இலட்ச ரூபாய்க்கு மேல் மமதா இழந்தது தெரியவந்தது. இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு, அனைவரும் தொட்டதற்கு எல்லாம் மமதாவை குத்திக் காட்டியுள்ளனர்.
அதிலும், தனது கணவனின் அண்ணன் மனைவி நவீனா தொடர்ந்து அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால், நவீனாவை நேரம் பார்த்து பழி வாங்குவதற்கு மமதா சதித் திட்டம் தீட்டியுள்ளார். இந்த நிலையில், சம்பவத்து அன்று நவீனாவின் மகள் ஹரிஷ்டாவை, ஆள் இல்லாத வீட்டிற்கு மமதா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியின் கழுத்தை நெரித்து மயக்கமடையச் செய்துள்ளார்.
பின்னர், ஈவு இரக்கமின்றி கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்படியும் ஆத்திரம் தீராமல் தயாராக வைத்திருந்த பெரிய கட்டரை பயன்படுத்தி சிறுமியின் தலையை துண்டித்ததாக கூறி குலைநடுங்கச் செய்துள்ளார்.
அத்துடன், சிறுமி உயிரிழந்தை அறிந்து குடும்பத்தினருடன் சேர்ந்து அழுது துடித்து நாடகம் ஆடியதும் அம்பலமாகியுள்ளது.