செய்திகள்
'டித்வா' புயலின் தாக்கத்தால் 4,800 மண்சரிவுகள்!

Jan 12, 2026 - 11:05 PM -

0

'டித்வா' புயலின் தாக்கத்தால் 4,800 மண்சரிவுகள்!

'டித்வா' புயலுக்குப் பின்னர் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுமார் 4,800 மண்சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆத்தர் சி. கிளார்க் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ தெரிவித்துள்ளார். 

இன்று (12) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். 

'டித்வா புயல் ஏற்பட்டதன் பின்னர் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி மண்சரிவு வரைபடமாக்கல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். 

அந்த வரைபடங்களை பகுப்பாய்வு செய்தபோது, ஊடகங்கள் வாயிலாக இதுவரை அறிவிக்கப்பட்டதை விடவும் மிக அதிக எண்ணிக்கையிலான மண்சரிவுகள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

"செயற்கைக்கோள் புகைப்படப் பகுப்பாய்வு மூலம் நாடு தழுவிய ரீதியில் மண்சரிவுகள் முழுமையாக வரைபடமாக்கப்பட்டதுடன், இதன் மூலம் மொத்த மண்சரிவு சம்பவங்களின் எண்ணிக்கை 4,800 இற்கு அருகில் இருப்பது தெரியவந்துள்ளது. 

'டித்வா' புயல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகப் பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி நாம் மண்சரிவுகளை வரைபடமாக்கினோம். 

அந்த வரைபடங்களின்படி, ஊடகங்கள் வாயிலாகப் பிரசாரப்படுத்தப்பட்ட மண்சரிவுகளின் எண்ணிக்கையை விடவும் பாரிய அளவிலான மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதை நாம் கண்டறிந்தோம். அந்தச் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகச் சுமார் 4,800 மண்சரிவுகள் பதிவாகியுள்ளன." என்றார். 

கேள்வி: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில் 1,241 இடங்களில் பாரிய மண்சரிவுகள் காணப்பட்டதாகக் கூறியிருந்தது. அதைத் தவிர சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மண்சரிவுகள் குறித்து அவர்கள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் நீங்கள் 4,800 மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறீர்கள். இது நான்கு மடங்கு அதிகமாகும். அப்படியென்றால் இந்த 4,800 மண்சரிவுகளும் கொஸ்லந்த மண்சரிவைப் போன்ற பாரிய அளவிலானவையா? 

பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ: "இல்லை, இதில் சிறிய அளவிலான மண் சரிவுகளையும் நாம் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகப் பெற்றுள்ளோம். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் அவர்கள் தலையிட வேண்டிய இடங்களை மாத்திரம் அடையாளம் கண்டிருக்கலாம். ஆனால் எமது செயற்கைக்கோள் புகைப்படங்களில் காடுகளுக்குள் இடம்பெற்ற மண்சரிவுகள் கூடக் கணக்கிடப்படுகின்றன. அதனால்தான் எமது தரவுகளில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது." என்றார்.

கேள்வி: அப்படியென்றால் இது 'டித்வா' புயலின் பின்னர் ஏற்பட்ட மொத்த மண்சரிவுகளின் எண்ணிக்கையா? இது நாடு முழுவதிலுமானதா அல்லது மத்திய மலைநாடு தொடர்பானதா? 

பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ: "ஆம், இவை 'டித்வா' புயலுக்குப் பின்னர் ஏற்பட்டவை. அதிகமான மண்சரிவுகள் மத்திய மலைநாட்டிலேயே பதிவாகியுள்ளன. எனினும், இந்த எண்ணிக்கை நாடு முழுவதையும் உள்ளடக்கிய ஒரு கணக்கெடுப்பாகும். சிறிய அளவிலான மண் சரிவுகளையும் நாம் இதில் கவனத்தில் கொண்டுள்ளோம்." என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05