Jan 19, 2026 - 08:30 PM -
0
யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையில், அகழ்வுப் பணிகளைத் தொடர்வது குறித்து இன்று (19) முக்கியத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில், பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் மயான நிர்வாகக் குழுவினர் ஆகியோர் அகழ்வுப் பணி நடைபெறும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஏற்கனவே அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற குழிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், உடனடியாக அகழ்வுப் பணிகளைத் தொடர முடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், சட்ட வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் தேங்கியுள்ள நீரை வெளியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர் அகற்றப்பட்ட பின்னரே அகழ்வுப் பணிகளுக்கான திகதி நிர்ணயிக்கப்படும்.
மயானத்தின் உட்புறத்தில் உள்ள பாதையை நல்லூர் பிரதேச சபையினர் சீரமைத்துள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
இதனைப் பரிசீலித்த நீதிமன்றம், அகழ்வுப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை குறித்த வளாகத்தில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையோ அல்லது நிலத்தின் தோற்றத்தில் மாற்றங்களையோ ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி எவ்வித பணிகளையும் அங்கு மேற்கொள்ள முடியாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான ரனிதா ஞானராஜா மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களைத் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை மீண்டும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.
--

