Jan 23, 2026 - 01:34 PM -
0
அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயலைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka' நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்காக இலங்கையின் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளினால் இதுவரை வழங்கப்பட்டுள்ள நன்கொடைத் தொகை 8.5 பில்லியன் ரூபாவையும் கடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், வெளிநாடுகளிலிருந்து கிடைத்துள்ள நிதியுதவியும் தற்போது அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அவ்வாறு கிடைத்த வெளிநாட்டு நிதியின் அளவு தற்போது 9.49 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கடந்துள்ளதாகத் தெரிவித்தார்.
நிதி உதவி வழங்கிய நாடுகளுள் அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான நிதி கிடைத்துள்ளதாகவும், அந்தத் தொகை ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தவிர, முறையே அவுஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பூட்டான், இத்தாலி மற்றும் கொரியா ஆகிய நாடுகள் அதிக நிதி உதவி வழங்கிய முதல் 10 நாடுகளாக உள்ளதாக ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
மேலும், இந்நாடுகளைத் தவிர பல வெளிநாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கியுள்ளதாகவும், அதன்படி அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மொத்தம் 47 வெளிநாடுகள் உதவி வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பணமாகப் பெறப்பட்ட உதவிகளுக்கு மேலதிகமாக, இலங்கைச் சுங்கத்திற்குப் பெருமளவிலான பொருட்களும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதுவரை சுங்கத்திற்கு கிடைத்துள்ள பொருட்களின் மொத்த மதிப்பு 2.3 பில்லியன் ரூபாவையும் தாண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

