Jan 23, 2026 - 11:34 PM -
0
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது சுகாதார விதிமுறைகளைப் பேணத் தவறிய 24 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராகப் பொது சுகாதார பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது, மருத்துவச் சான்றிதழ் இன்றி உணவைக் கையாண்டமை, திண்மக்கழிவுகளைத் திறந்த வெளியில் வீசியமை, அனுமதிக்கப்பட்ட உணவுத்தரக் கொள்கலன்களைப் பயன்படுத்தாது பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்தியமை, முகச்சவரம் மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணாமல் உணவைக் கையாண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனடிப்படையில் ஐஸ்கிரீம் வாகனங்கள், பஞ்சு மிட்டாய் உற்பத்தியாளர்கள், காரச் சுண்டல் வண்டிகள் மற்றும் பானி பூரி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 24 உணவு நிலையங்களுக்கு எதிராக, வல்வெட்டித்துறை நகர சபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் பா. தினேஷ், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 24 உரிமையாளர்களில் 19 பேர் மன்றில் முன்னிலையாகி, தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து, குறித்த 19 உரிமையாளர்களையும் கடுமையாக எச்சரித்த மன்று, அவர்களுக்கு மொத்தமாக 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது.
அதேவேளை, மன்றில் இன்று முன்னிலையாகாத ஏனைய 05 உரிமையாளர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
--

