Mar 1, 2026 - 09:27 AM -
0
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, 2024 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கணக்காய்வாளர்கள் சம்மேளனத்தின் (SAFA) சிறந்த வருடாந்த அறிக்கை சமர்ப்பிப்பு விருதுகள், ஒருங்கிணைந்த அறிக்கை விருதுகள் மற்றும் சார்க் நிறுவன ஆளுகை வெளிப்படுத்தல் விருதுகள் ஆகியவற்றில் தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவில் வெள்ளி விருதினை வென்று கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தியோகபூர்வ விருதுகள் வழங்கும் நிகழ்வு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்றது.
தெற்காசிய கணக்காய்வாளர்கள் சம்மேளனத்தின் (SAFA) வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூரல் மற்றும் ஆளுகை மேம்பாட்டுக்கான குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கடும் மதிப்பீடுகளின் அடிப்படையில், SLT-MOBITEL இன் 2024 நிதியாண்டுக்கான வருடாந்த அறிக்கையினை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. SLT-MOBITEL சார்பாக இவ்விருதினைப் பெற்றுக்கொள்வதற்காக சந்தைப்படுத்தல் முகாமையாளர் துஷார அமரநாத் மற்றும் கணக்காளர் – நிதிக் கணக்கியல் மற்றும் வரியிடல் கயத்திரிகா சச்சின்தானி ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிட்டு ஈட்டப்பட்ட இந்த வெற்றியானது, தெற்காசிய பிராந்தியத்தில் நிதி மற்றும் நிறுவன ஆளுகை அறிக்கையிடலில் SLT-MOBITEL கொண்டுள்ள சிறப்பாற்றலை வெளிப்படுத்துகின்றது.
தெற்காசிய பிராந்தியத்தின் முன்னணி நிறுவனங்களினால் சமர்ப்பிக்கப்படும் வருடாந்த அறிக்கைகளை மதிப்பீடு செய்யும் SAFA சிறந்த வருடாந்த அறிக்கை சமர்ப்பிப்பு விருதுகள், நிதி அறிக்கையிடல், ஒருங்கிணைந்த அறிக்கையிடல் மற்றும் நிறுவன ஆளுகை வெளிப்படுத்தல்கள் ஆகியவற்றில் கொண்டுள்ள தெளிவு, நேர்மைத்தன்மை மற்றும் ஆளுகை தரநிலைகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
நிறுவன அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மைத்தன்மை ஆகியவற்றுக்கான SLT- MOBITEL இன் அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் உறுதி செய்துள்ளது. ஆளுகை மற்றும் பொறுப்புக்கூரல் குறித்த உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைந்துள்ள இந்த கௌரவமானது, உயர்தர ஒருங்கிணைந்த அறிக்கையிடல் மற்றும் வெளிப்படுத்தல்கள் மூலம் பங்குதாரர்களின் நம்பிக்கையையும் செயல்பாட்டு மீட்சித்தன்மையையும் வலுப்படுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது. பிராந்திய ரீதியாக மதிக்கப்படும் ஒரு அளவுகோலாக, இது நிறுவன வெளிப்படுத்தல்களில் SLT-MOBITEL கொண்டுள்ள பொறுப்புக்கூரல் மற்றும் நேர்மைத்தன்மை மீதான கவனத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

