Mar 28, 2026 - 05:52 PM -
0
விவசாயம் மற்றும் ஏனைய சில துறைகளுக்காக எரிபொருளை விநியோகிப்பதற்கு புதிய QR முறைமையொன்றை நடைமுறைப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்காக வாகனங்கள் அற்ற புதிய QR முறைமையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்தார்.
புதிய QR முறைமை தற்போது வடிவமைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் எரிபொருள் தேவைகளுக்காக இது உருவாக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தமது எரிபொருள் தேவை குறித்துத் தெரியப்படுத்தி இந்தப் புதிய QR முறைமையை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும், இந்த புதிய QR குறியீடு அந்தந்த நபர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த புதிய QR குறியீடு பல முறைகளின் கீழ் உருவாக்கப்படுவதுடன், அதன் கீழ் 7 பிரிவுகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இந்தப் பிரிவுகளுக்கு எவ்வளவு எரிபொருள் வழங்கப்படும் என்பதை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானிக்கும் எனத் தெரிவித்தார்.
இப்புதிய முறைமை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இதன் மூலம் விவசாயிகள், மீனவர்கள் என வாகனங்கள் இன்றி இயந்திரங்கள் மூலம் பல்வேறு தொழில்கள் மற்றும் தேவைகளுக்காக எரிபொருளைப் பயன்படுத்துபவர்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
