Mar 28, 2026 - 06:29 PM -
0
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
வர்த்தக அமைச்சில் நேற்று (27) நடைபெற்ற இச்சந்திப்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆலோசகர் மைத்ரேய் குல்கர்னி உள்ளிட்ட குழுவினரும், வர்த்தக அமைச்சின் சார்பில் அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, கலாநிதி சாந்த ஜயரத்ன மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பொதுச்சபையின் (CWE) தலைவர் கோசல வில்பாவ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகப் பரிமாற்றங்களை மேலும் விரிவுபடுத்துதல், முதலீட்டுத் தொடர்புகளை மேம்படுத்துதல், புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிந்து ஊக்குவித்தல், இரு நாடுகளினதும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒத்துழைப்புடன் செயற்படுதல் மற்றும் கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்காகப் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கை உற்பத்திகளை இந்தியச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்காகக் கண்காட்சிகள் மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்ப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக தேயிலை மற்றும் ஆடைத் தொழில்துறை குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், இலங்கையின் உயர்தர ஆடைகளுக்கு இந்தியாவில் பெரும் தேவை நிலவுவதால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்றுமதியாளர்களுக்கு வழிகாட்டுவதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, இலங்கையின் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியாவின் NCL நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. இது ஒரு நேரடி விநியோகப் பிணைப்பை விடவும் விரிவான ஒத்துழைப்பாக அமையும் என இந்தியப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இலங்கையின் அரிசிச் சந்தை நிலவரம் மற்றும் விலைக் கட்டுப்பாடு குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. அரிசி விலை கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், சம்பா போன்ற விசேட அரிசி வகைகளுக்குச் சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசாங்கத்தினால் சுமார் 300,000 மெட்ரிக் தொன் அரிசியை முகாமைத்துவம் செய்ய முடிந்தால், நிச்சயமாக விலையைக் கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இந்திய விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச உறுதிமொழி விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அங்கு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி வரம்பற்ற முறையில் இருப்புக்களைச் சேமிப்பதைத் தடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் 'இந்திய உணவுக் கழகம்' வசம் உள்ள பாரிய களஞ்சியத் தொகுதிகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் இதன்போது அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு விளக்கமளித்தார்.
