Mar 29, 2026 - 11:42 PM -
0
பெலாரஸ் நாட்டின் பெலாவியா விமான சேவை, ஏப்ரல் மாதத்தில் மின்ஸ்க் தேசிய விமான நிலையத்திலிருந்து மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் வரை விமானப் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி மத்தள வரையான இந்த விசேட விமானப் பயணங்கள் ஏப்ரல் 3 மற்றும் 14 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, மின்ஸ்க் தேசிய விமான நிலையம் இன்று முதல் ஒக்டோபர் 24 வரை நடைமுறைக்கு வரும் வகையில் தனது கோடைகால கால அட்டவணையை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, 10 விமான நிறுவனங்கள் பெலாரஸ் தலைநகரில் இருந்து தமது வழக்கமான விமானச் செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.
பிரபலமான சுற்றுலாத் தலங்கள் மற்றும் ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகள் உட்பட 34 இடங்களுக்காக இந்தக் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இஸ்ரேலிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் வெளிநாட்டு விமானங்களுக்கான வான்வெளியைக் கட்டுப்படுத்த எடுத்த தீர்மானத்தையடுத்து, பெலாவியா விமான சேவை டெல் அவிவ் வரையான விமானப் பயணங்களை ஏப்ரல் 16 வரை ரத்து செய்துள்ளது.
பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியிலும், பெலாவியா விமான சேவை பின்வரும் நகரங்களுக்காகத் தனது விமானச் செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
மத்தள, டெல்லி, துபாய், அல்மாட்டி, அஸ்தானா, பாகு, படுமி, எகடரின்பர்க், யெரெவன், கசான், கலினின்கிராட், காம் ரான்/நா ட்ராங் (வியட்நாம்), குடாய்சி, மொஸ்கோ, மகாச்ச்கலா, முர்மான்ஸ்க், சான்யா, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி, இஸ்தான்புல், தாஷ்கண்ட், திபிலிசி, டெல் அவிவ், துர்க்மென்பாஷி உள்ளிட்ட நகரங்களுக்கான சேவையை முன்னெடுக்கவுள்ளது.
