May 7, 2026 - 01:55 PM -
0
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று (06) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரின் ப்ளேஆஃப்ஸ் போட்டிகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது.
விறுவிறுப்பாக நடந்த வரும் ஐபிஎல் தொடரின் 19 ஆவது சீசன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 70 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தொடர் இப்போது முக்கியமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த முறை புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கிட்டத்தட்ட 6 அணிகள் போட்டிபோட்டு வருகின்றன. இதில் பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு, குஜராஜ் ஆகிய அணிகள் ஆறு வெற்றிக்ளை பெற்றுள்ளன. இவர்களுக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றிகளுடன் 6 ஆம் இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுகளுக்கான போட்டிகள் எங்கு நடக்கும் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்த பிசிசிஐ தற்போது அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையேயான குவாலிஃபையர் 1 போட்டி, மே 26 அன்று தரம்சாலாவில் உள்ள HPCA ஸ்டேடியத்தில் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அதன்பிறகு, சண்டிகரில் உள்ள புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில், மே 27 அன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறும். இதில் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ள அணிகள் மோதும். குவாலிஃபையர் 2 போட்டி, மே 29 அன்று அதே சண்டிகர் மைதானத்தில் நடைபெறும். இதில், குவாலிஃபையர் 1 இல் தோல்வியடைந்த அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற அணியும் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது இடத்திற்கு போட்டியிடும்.
இந்த சீசனின் இறுதிப் போட்டி, மே 31 ஆம் திகதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். இதனால், இறுதிப் போட்டி மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நிர்வாக மற்றும் தளபாட காரணங்களுக்காக, இந்த முறை ப்ளேஆஃப்ஸ் போட்டிகள் மூன்றும் வெவ்வேறு மைதானங்களில் ஒரு சிறப்பு நிகழ்வாக நடத்தப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முதலில் இறுதிப் போட்டி பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், உள்ளூர் கிரிக்கெட் சங்கம் மற்றும் அதிகாரிகளின் சில கோரிக்கைகள், பிசிசிஐ-யின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்ததால், இறுதிப் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது என்று பிசிசிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ப்ளேஆஃப்ஸ் அட்டவணை,
குவாலிஃபையர் 1 - மே 26 - HPCA மைதானம், தரம்சாலா
எலிமினேட்டர் - மே 27 - புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம், சண்டிகர்
குவாலிஃபையர் 2 - மே 29 - புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம், சண்டிகர்
இறுதிப் போட்டி - மே 31 - நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்.
