May 7, 2026 - 04:08 PM -
0
இலங்கையின் தனிநபர் வருமானம் வரலாற்றில் முதல்முறையாக 5000 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
"பல தசாப்தங்களாக இந்த பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அமைச்சுகளை நிர்வகித்து, நாட்டை அழித்து வங்குரோத்தடைய செய்த ஒரு நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். இப்போது அவர்கள் வந்து எமக்கு முன்னேற்ற அறிக்கை குறித்தும், 'எல் - போர்டு' (L-Board) அரசாங்கம் குறித்தும் அறிவுரை கூறுகிறார்கள். அவர்களின் அரசியல் கட்சிகளும் இப்போது அழிந்து, திக்குத் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றன.
நாங்கள் நாட்டைப் பொறுப்பேற்று ஓராண்டிற்குள், கடந்த வருடத்தில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 109 பில்லியன் டொலர்களை அண்மித்தது. அதேபோல், வரலாற்றில் முதல்முறையாக எமது நாட்டின் தனிநபர் வருமானம் 5000 டொலர்களைத் தாண்டியுள்ளது.
நீங்கள் பல ஆண்டுகளாக அழித்த பொருளாதாரம் இது. நீங்கள் சொன்ன அந்த 'எல் - போர்டு' அரசாங்கம் ஒன்றரை வருட காலத்திற்குள் பொருளாதாரத்தை மிகவும் சிறப்பாகவும் நிலையானதாகவும் கட்டியெழுப்பியுள்ளது. அதனால்தான், அன்று ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்து, டித்வா பாதிப்பை சீர்செய்ய ஒரு ரூபாய் கூட கடனாகப் பெறாமல் திறைசேரி மூலமே இழப்பீடுகளை வழங்குவோம்" என்று கூறினார்.
